Banner Image

12-09-2026
பொதுக்காலம் 23 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22
நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?

எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 116: 12-13. 17-18 (பல்லவி: 17a)
பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, `ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் !
இறைவன் மானிடருக்கு விவிலியம் வழியாக அளித்துள்ள வாக்குறுதிகளில் அழகானதும், ஆறுதல் தருவதுமான ஒன்று: கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பது. கொடுப்பது என்பது அடிப்படை மானிட நேயப் பண்புகளில் ஒன்று. ஆனாலும், நமது தன்னலம், பாதுகாப்பின்மை போன்றவை நம்மைக் கொடுக்க விடாதபடித் தடுக்கின்றன. அவற்றை மீறி, கொடுத்து, அதன் வழியாக இறைவனிடமிருந்து பன்மடங்கு அதிகமாக நாம் பெறும் அனுபவம் இனிய ஓர் அனுபவம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக இறைவன் நமக்குத் தருவார் என்பது இயேசு இன்றைய வாசகம் மூலம் நமக்குத் தரும் வாக்குறுதி. அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள் என்று தெளிவாகப் போதிக்கின்றார் இயேசு.



எனவே, நமது நேரம், ஆற்றல்கள், திறமைகள், கொடைகள், அன்பு, ஆறுதல், ஊக்கம், செல்வம், பொருள்கள் இவற்றைப் பிறருக்குத் தாராளமாகக் கொடுப்போம். கொடுப்பதைவிட அதிகமாக இறைவனிடமிருந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

கொடை வள்ளலான இறைவா, வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே எங்கள்மீது உமது அருள்கொடைகளை வாரி வழங்குவதற்காக உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். உம்மிடமிருந்து இன்னும் ஏராளமான நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும், பகிர்வு செய்ய வேண்டும் என்று நீர் விடுக்கம் அழைப்புக்காக நன்றி. கொடுக்கின்ற, பகிர்கின்ற உள்ளத்தை எங்களுக்குத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media