Banner Image

03-09-2026
பொதுக்காலம் 22 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23
நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
சகோதரர் சகோதரிகளே, எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ``ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.''

மேலும் ``ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.'' எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.

அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 24: 1-2. 3-4 5-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி



3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி



5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர்
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
அக்காலத்தில் இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார்.

சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார்.

அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.

இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
எது உண்மை ஞானம் ?
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வழி வந்த கிரேக்கர்கள் ஞானத்துக்கும், அறிவாற்றலுக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்கள். பெரிய சிந்தனையாளர்கள், ஞானிகள் அவர்கள் மத்தியிலே வாழ்ந்தனர். ஆனால், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார் பவுல். எனவே, எது உண்மை ஞானம் ? என்னும் கேள்வியை எழுப்பி, விடையும் தருகிறார். “யாரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்” என்கிறார். இவ்வுலக படிப்போ, பட்டங்களோ, செல்வமோரூhநடடip; நிறை வாழ்வை, இறையன்பைத் தர முடியாது. கிறிஸ்து மட்டுமே நமது ஞானம், நமது செல்வம், நமது பெருமை. அவரது கீழ்ப்படிதல் அனைவருக்கும் பாடம். எனவே, மனிதரைக் குறித்து, நமது சாதனைகளைக் குறித்து நாம் யாரும் பெருமை பாராட்ட வேண்டாம். இயேசுவைக் குறித்து, அவரது தியாகத்தைக் குறித்து பெருமை கொள்வோம். அதுவே உண்மையான ஞானம்.

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட எதுவும் எங்களுக்குச் சொந்தமல்ல. அனைத்தும் உமக்கே சொந்தம் என்னும் உண்மையை உணர நீர் தந்த ஞானத்துக்காக நன்றி சொல்கிறோம். உலக ஞானத்தின்படி வாழாமல், இறை ஞானத்தின்படி வாழ எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media