Banner Image

02-09-2026
பொதுக்காலம் 22 வாரம் புதன்கிழமை

புனித பெரிய கிரகோரி
முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9
நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.
சகோதரர் சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.

நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?

ஏனெனில், ஒருவர் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றும் வேறொருவர் `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே!

ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான்.

தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்33: 12-13. 14-15. 20-21
ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
2 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி



14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! பல்லவி



20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44
அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ``நீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின.

அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.

அவரோ அவர்களிடம், ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார்.

பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று,
ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்துவந்தார்'' (லூக்கா 4:31)
நாசரேத்திலிருந்து இயேசு கப்பர்நாகும் என்னும் ஊருக்குச் செல்கிறார். கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் அமைந்த ஊர் கப்பர்நாகும். அங்கே மீன்பிடித்தல் மும்முரமாக நடந்துவந்தது. அவ்வூரில் இருந்த தொழுகைக் கூடத்திற்கு இயேசு செல்கிறார். மக்களுக்கு மீட்பளிக்க வந்த இயேசுவின் பணி நோயாளருக்கு நலம் வழங்கும் பணியாகத் தொடங்குகிறது. தொழுகைக் கூடத்தில் ஓய்வு நாளன்று இயேசு போதித்துக்கொண்டிருக்கையில் பேய்பிடித்த ஒரு மனிதர் உரத்த குரலில் கத்துகிறார். இயேசு அந்த மனிதரைப் பிடித்திருந்த பேயை அதட்டி வெளியேறச் செய்கிறார். அந்த மனிதரும் குணமடைகிறார். இயேசு புரிந்த முதல் புதுமையாக மாற்கு, லூக்கா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர் (காண்க: லூக் 4:33-37; மாற் 1:21-28). இதன் பொருள் என்ன? பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை உலக அரசுகள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாகவும் கூறி, ''நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது (லூக் 4:5-7). ''நீர் இறைமகன் என்றால் இந்தக் கல்லை அப்பமாகும்படி கட்டளையிடும்'' என அலகை கேட்டது. ஆனால் இயேசு அலகையின் சோதனையை முறியடித்து, தமக்குக் கடவுள் அளித்த அதிகாரம் உண்டென நிலைநாட்டினார். கப்பர்நாகும் ஊரில் பேய் இயேசு ''கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' எனத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறது (லூக் 4:34). நற்செய்தி நூல்களில் ''அலகை'' (''சாத்தான்'') என்பது கடவுளை எதிர்த்து நிற்கின்ற தீய சக்தியாக விளக்கப்படுகிறது. ''பேய்கள்'' என்பவை அலகைக்குக் கீழ் பணிபுரிகின்ற, தாழ் நிலை ஊழியர்களாகக் காட்டப்படுகின்றன. இயேசு அலகையின் ஆட்சியை ஒழிக்க வந்தார் என்னும் உண்மையை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன.




கடவுளின் ஆட்சியை நிலைநாட்ட வந்த இயேசு அலகையின் ஆட்சியை முறியடிப்பார். எனவே, இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நிகழ்கின்ற போர் இயேசுவின் பணித் தொடக்கத்திலிருந்தே நடந்தது. பேய்பிடித்திருந்த மனிதர் குணமடைந்ததும் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்கள் ''திகைப்படைந்தனர்'' (லூக் 4:36). ''எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!'' என்று கூறி அவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர் (லூக் 4:36). ஆனால் அவர்கள் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டதாக'' லூக்கா குறிப்பிடவில்லை. இயேசு புரிந்த இப்புதுமையில் இரு முக்கிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில், இயேசு ''அதிகாரத்தோடு'' போதிக்கவும், கடவுளிடமிருந்த பெற்ற அதிகாரத்தோடு பேய்களை முறியடிக்கவும் செய்கிறார். எனவே, இயேசுவின் போதனையும் அவர் புரியும் புதுமையும் கடவுளின் சக்தியை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது, கடவுளின் சக்தி இயேசு வழியாக வெளிப்பட்டதைக் கண்டபோதிலும் மக்கள் வியப்படைகிறார்களே தவிர இயேசுவை நம்பி ஏற்க முன்வரவில்லை. நாமும் இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்குவதைக் கண்டு வியப்படைவதோடு நின்றுவிடாமல் அவரே நமக்கு நலமளிக்கின்ற ''மருத்துவர்'' என்றும் நம்மைத் தீய சக்திகளிடமிருந்து ''மீட்பவர்'' என்றும் ஏற்று, அவரிடத்தில் ''நம்பிக்கை கொள்ள'' அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media