Banner Image

23-08-2026
பொதுக்காலம் 21 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
பொறுப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். கடவுளின் விருப்பத்தை உணர்ந்து செயல்படவும், அவர் வழங்கியுள்ள பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவர்களாய் திகழவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. "மானிட மகன் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு சரியாக பதிலளித்த சீமோன் பேதுரு, திருச்சபையின் பாறையாக மாறுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் வழங்குவதாக ஆண்டவர் இயேசு வாக்களிக்கிறார். விண்ணுலகு மற்றும் மண்ணுலகின் மீது பேதுரு அதிகாரம் பெறுவதையும் காண்கிறோம். 'இயேசுவே வாழும் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட நாம் தயாராக இருக்கும்போது, ஆண்டவர் நமக்கு மேலான பொறுப்புகளைத் தருவார். நமது வாழ்க்கை கடமைகளை முழுமனதுடன் நிறைவேற்றி, ஆண்டவரின் அருளைக் கண்டுணர வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23
தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்.
உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன்.

எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 138: 1-2a. 2bc-3. 6,8bc
பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.
1 ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர். 8bc ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36
அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.
சகோதரர் சகோதரிகளே, கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ``ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20
அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.


அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
அனைத்துலக அரசரே இறைவா,

திருச்சபையின் மீதும் உலகின் மீதும் நீர் வழங்கியுள்ள அதிகாரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உறுதியான மனநிலையோடு கையாள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
அதிகாரம் வழங்குபவரே இறைவா,

உலக நாடுகளின் ஆட்சியாளர்களும், சமூகத் தலைவர்களும் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், பொருளாதார, அருளாதார நலன்களைக் கொணரவும் ஆர்வத்துடன் உழைக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
அருளின் அதிபதியே இறைவா,

எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உமது நற்செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதில் ஆர்வம் கொள்ளவும், உமது அரசை விரைந்து கட்டியெழுப்பவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
ஆறுதல் தருபவரே இறைவா,

உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு பெறவும், நற்செய்தியின் பரவலை எதிர்ப்போர் அனைவரும் மனந்திரும்பி அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கை விடவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
மாட்சியின் மன்னரே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை உணர்ந்து வாழவும், ஆண்டவர் தந்துள்ள பொறுப்புகளை முழுமனதோடு நிறைவேற்றவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'
என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)
கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார்.




தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media