Banner Image

17-07-2026
பொதுக்காலம் 15 வாரம் வெள்ளிக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6,21-22,7-8
உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, “ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; “நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்."

“எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – எசா 38: 10. 11. 12. 16 (பல்லவி: 17b)
பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர்.
10 `என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன். பல்லவி

11 `வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன். பல்லவி

12 என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார். பல்லவி

16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8
அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.
அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.



மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media