Banner Image

16-07-2026
பொதுக்காலம் 15 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9,12,16-19
புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்.
நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர்.

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 102: 12-14. 15-17. 18, 20, 19
பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.
12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில் இயேசு கூறியது: ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது�� என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.



மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media