Banner Image

09-07-2026
பொதுக்காலம் 14 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8-9
என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது.
ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.
ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 80: 1-2. 14-15
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!
1இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15
அக்காலத்தில், இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.



மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media