Banner Image

08-07-2026
பொதுக்காலம் 14 வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3,7-8,12
ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன.
இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், ``நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?'' என்பார்கள்.

சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து `எங்களை மூடிக்கொள்ளுங்கள்,' குன்றுகளைப் பார்த்து `எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள்.
நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 105: 2-3. 4-5. 6-7
பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7
அக்காலத்தில், இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.



மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media