Banner Image

05-07-2026
பொதுக்காலம் 14 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
வார்த்தைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை. கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள். நான் கடவுளை வெளியே கொண்டு வர தடைக்கற்கள் என்னென்ன? என்னிடத்தில் கடவுளை கொண்டு வர முயற்சி எடுப்பேனா? சிந்தித்தவர்களாக வரம் வேண்டி, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம் – இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10
அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
ஆண்டவர் கூறியது: மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப் படை இல்லாமற் போகச் செய்வார்; எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 145: 1-2. 8-9. 10-11. 13ab-14 (பல்லவி: 1a)
பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

13ab உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 9,11-13
தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11:25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில், இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
ஆறுதலின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், கிறிஸ்து வழங்கும் ஆறுதலை திருச்சபையின் மக்களுக்கு பெற்றுத்தரும் கருவிகளாக செயல்படத் தேவையான ஆற்றலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
வாழ்வின் ஊற்றே இறைவா,

உலகெங்கும் அழிவை விளைவிக்கும் தீமையின் ஆதிக்கம் பெருகி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை விருப்பத்துடன் தேடத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
உண்மையின் ஊற்றே இறைவா,

எம் நாட்டில் உமது மேன்மையை அறியாமல் இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தியின் உண்மை ஒளியை வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருவாக்கு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
ஆற்றலின் ஊற்றே இறைவா,

போர்கள், வன்முறைகள் உள்ளிட்ட தீமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அனைவரும், இவ்வுலகில் உமது அமைதியின் அரசை நிறுவும் ஆர்வத்துடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
மகிழ்வின் ஊற்றே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் எளிய நுகத்தை எங்கள் மேல் ஏற்றுகொள்ளவும், அவர் வழியாக இளைப்பாறுதலைக் கண்டடை யவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)
சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.



மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media