Banner Image

07-06-2026
பொதுக்காலம் பத்தாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை

இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் விழா
திருப்பலி முன்னுரை
"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்."
நற்கருணைக்குரியவர்களே, கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு, நற்கருணை வடிவில் எப்போதும் நம்மோடு இருக்கிறார். "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, நற்கருணையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. கல்வாரி பலியின் நிகழ்வாகிய இந்த திருப்பலி கொண்டாட்டம், வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நமக்கு விருந்தாக்குகிறது. இயேசுவின் சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடிக்கும் பேறுபெற்றுள்ள நாம், அவரோடு என்றென்றும் இணைந்திருக்கும் வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14b-16a
நீங்களும் உங்கள் மூதாதையாரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12a)
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17
அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 6:51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''
``நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
எங்கும் இருப்பவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவாசத்தில் வளர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
ஒற்றுமையை அருள்பவரே இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
தியாகத்தின் உருவே இறைவா,

எம் நாட்டு தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
ஆறுதல் அளிப்பவரே இறைவா,

உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும் கிடைக்குமாறு அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
அன்பின் பிறப்பிடமே இறைவா,

எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளர உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது.
என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)
மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media