Banner Image

03-06-2026
பொதுக்காலம் ஒன்பதாவது வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3; 6-12
உம்மீது என் கைகளை விரித்ததால், உமக்குள் வந்துள்ள கடவுளின் வரத்தைப் புத்துயிர்பெறச் செய்யும்.
என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன்.

உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன். இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 23: 1-2a. 2bcd. (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 2a பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கி இருப்பதுபோல, என் கண்களை உயர்த்தியுள்ளேன். பல்லவி

2bcd பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27
அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.
சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா?
‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை.
மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்'' (மாற்கு 12:25)
இயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத்தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).

விண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிட மாட்டார். மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media