02-06-2026
பொதுக்காலம் ஒன்பதாவது வாரம்
செவ்வாய் கிழமை
புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அன்புக்குரியவர்களே, கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள்.
அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே,
ஊழி, ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி
10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;
அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன,
நாங்களும் பறந்து விடுகின்றோம். பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி
எபே 1: 17-18
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, ``ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்'' என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".
படைப்பதும் புதுப்படைப்பாக்குவதும் தூய ஆவியின் செயல். ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்குவது படைப்பு. இறைவன் உலகைப் படைத்தபோது, ஒன்றுமில்லாமையிலிருந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத்தையும் படைத்தார். அவ்வாரே தம் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைக்கிறார். இவ்வாறு தூய ஆவியை ஊதுவதால், தூய ஆவியின் செயல்பாட்டால் படைப்புகள் உண்டாகின.
மனிதன் பாவம் செய்த பின் அதே தூய ஆவி, அவன் மீது செயல்படும்போதும், அவன் மீது ஊதப்படும்போதும் அவன் புதிதாகப் படைக்கப்படுகிறான். பேயை விரட்டும்போதும், நோயைப் போக்கும்போதும், பாவத்தை மன்னிக்கும்போதும், அர்ச்சிக்கும் போதும், அருள் வாழ்வுக்கு அழைக்கும்போதும், தூய ஆவி செயல்படுவதால், மனிதன்,தன் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் பெறுகிறான். தூய ஆவி அவனைப் புது படைப்பாக்குகிறார். இவ்வாறு புதுப்படைப்பாக்கப்படும்போதெல்லாம் மனிதனின் பாவங்கள் கழுவப்படுகின்றன. பாவ மன்னிப்பு கொடுத்து புதுப்படைப்பாக்கும் அருளை, திருத்தூதர்களுக்கும் அவர்கள் வழியாகத் திருச்சபைக்கும் தூய ஆவியார் வழங்குகிறார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட்சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப் படைப்பாகிறோம். புதுப்படைப்பாகும் நம்மில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்து முழுமையாகக் கிடைக்கிறது. தூய ஆவி தரும் இக்கொடைகளைப் பெற்று மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:
உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.