Banner Image

23-05-2026
பாஸ்கா காலம் ஏழாவது வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28:16-20,30-31
பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.
உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.

யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்கவேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்” என்றார்.

பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 11:4, 5-7
பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.
4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. -பல்லவி

5 ஆண்டவர் நேர்மையாளரையும் வன்முறையில் "நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.-பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 16:7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:20-25
அக்காலத்தில்
பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?” என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.

ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்றுதான் கூறினார்.

இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்' என்றார்'' (யோவான் 16:28)
இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. இயேசு தம்மைப் பற்றி நமக்கு அறிவித்ததிலிருந்து நாம் அவருக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் அந்த உறவின் முழுப் பொருளும் நமக்குத் தெரிவதில்லை. எனவேதான் கடவுள் என்றால் ''மறைபொருள்'' என நாம் ஏற்கிறோம். அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; நம் அகக் கண்களும் கடவுளை மங்கலாகத்தான் அறிய முடிகிறது. ஆக, இயேசு தம்மைக் கடவுளின் மகன் என அறிமுகம் செய்யும்போது அந்த தந்தை-மகன் உறவை அவர் நமக்கு எவ்வாறு விளக்கிக் கூறுகிறாரோ அவ்வாறே நாமும் புரிந்திட வேண்டும். இவ்வுலக அனுபவத்தின்படி, மகன் பிறப்பதற்குத் தந்தையின் ஒத்துழைப்பு வேண்டும். உயிரியல் தத்துவங்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை நாம் விளக்க முடியும். ஆனால் இயேசு தந்தையிடமிருந்து புறப்பட்டு வருவதை நாம் அறிவியல் பாணியில் புரிந்திட இயலாது. மாறாக, இயேசு தமக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை விளக்கும்போது அதை நாம் இறையியல் பார்வையில் காண வேண்டும். அதாவது, விவிலியம் நமக்கு உணர்த்துவதையும், அந்த விவிலிய உண்மையைக் கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் புரிந்துவந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்க்கும்போது, இயேசு தாம் கடவுளிடமிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறியதோடு தாம் கடவுளோடு இணைபிரியாவிதத்தில் ஒன்றித்திருப்பதையும் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர். உலகில் தாம் ஆற்ற வேண்டிய பணியைச் செய்து முடிக்கிறார் இயேசு. தந்தையின் விருப்பப்படி இயேசு தம் உயிரையே மக்களின் மீட்புக்காகப் பலியாக்குகிறார். தம் பணி நிறைவுற்றதும் அவர் தந்தையிடம் மீண்டும் செல்கிறார். இதிலிருந்து இயேசு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக நாம் கருதலாகாது. நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்த தூய ஆவியை இயேசு அனுப்புவதாக வாக்களித்தார். மேலும் உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இயேசு எக்காலத்திற்கும் நம்மோடு இருப்பதாக உறுதி தந்துள்ளார். எனவே, இயேசு தந்தையோடு இணைந்திருப்பதுபோல நம்மோடும் கூட இருந்து நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார் என உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media