Banner Image

22-05-2026
பாஸ்கா காலம் ஏழாவது வாரம் வெள்ளிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25:13-21
இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.
அந்நாள்களில்
அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்:

“பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, ‘குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல’ என்று கூறினேன்.

எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.

இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப் போய், “நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட விரும்புகிறீரா?” எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.”

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 103:1-2,11-12,19-20
பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார் -பல்லவி

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.-பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14:26

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:15-19
தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின் தொடர்” என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்' என்றார்'' (யோவான் 16:28)
இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. இயேசு தம்மைப் பற்றி நமக்கு அறிவித்ததிலிருந்து நாம் அவருக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் அந்த உறவின் முழுப் பொருளும் நமக்குத் தெரிவதில்லை. எனவேதான் கடவுள் என்றால் ''மறைபொருள்'' என நாம் ஏற்கிறோம். அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; நம் அகக் கண்களும் கடவுளை மங்கலாகத்தான் அறிய முடிகிறது. ஆக, இயேசு தம்மைக் கடவுளின் மகன் என அறிமுகம் செய்யும்போது அந்த தந்தை-மகன் உறவை அவர் நமக்கு எவ்வாறு விளக்கிக் கூறுகிறாரோ அவ்வாறே நாமும் புரிந்திட வேண்டும். இவ்வுலக அனுபவத்தின்படி, மகன் பிறப்பதற்குத் தந்தையின் ஒத்துழைப்பு வேண்டும். உயிரியல் தத்துவங்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை நாம் விளக்க முடியும். ஆனால் இயேசு தந்தையிடமிருந்து புறப்பட்டு வருவதை நாம் அறிவியல் பாணியில் புரிந்திட இயலாது. மாறாக, இயேசு தமக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை விளக்கும்போது அதை நாம் இறையியல் பார்வையில் காண வேண்டும். அதாவது, விவிலியம் நமக்கு உணர்த்துவதையும், அந்த விவிலிய உண்மையைக் கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் புரிந்துவந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்க்கும்போது, இயேசு தாம் கடவுளிடமிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறியதோடு தாம் கடவுளோடு இணைபிரியாவிதத்தில் ஒன்றித்திருப்பதையும் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர். உலகில் தாம் ஆற்ற வேண்டிய பணியைச் செய்து முடிக்கிறார் இயேசு. தந்தையின் விருப்பப்படி இயேசு தம் உயிரையே மக்களின் மீட்புக்காகப் பலியாக்குகிறார். தம் பணி நிறைவுற்றதும் அவர் தந்தையிடம் மீண்டும் செல்கிறார். இதிலிருந்து இயேசு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக நாம் கருதலாகாது. நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்த தூய ஆவியை இயேசு அனுப்புவதாக வாக்களித்தார். மேலும் உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இயேசு எக்காலத்திற்கும் நம்மோடு இருப்பதாக உறுதி தந்துள்ளார். எனவே, இயேசு தந்தையோடு இணைந்திருப்பதுபோல நம்மோடும் கூட இருந்து நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார் என உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media