17-05-2026
பாஸ்க்கா காலம் ஏழாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை
ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
"இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்."
விண்ணகத்துக்குரியவர்களே, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைகிறார். இந்த உலகை விட்டு செல்லும் முன், எந்நாளும் நம்மோடு இருப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார். தந்தையாம் இறைவனின் மாட்சிக்காக, தூய ஆவியாரின் துணையோடு கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை உலகெங்கும் பறை சாற்ற நினைவூட்டப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் அனைவரையும் அவரது சீடர்களாக்கும் ஆர்வத்துடன் பணியாற்ற, இத்திருப்பலியில் நாம் வரம் வேண்டுவோம்.
யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார்.
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.
அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி
அவரை விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார்.
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
மத் 28:19-20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
அக்காலத்தில்
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, ``விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என்று கூறினார்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
எல்லாம் வல்லவரே இறைவா,
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் வழங்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 2:
விண்ணில் வாழ்பவரே இறைவா,
மண்ணக இன்பங்களுக்கு அடிமையாகி, விண்ணக வாழ்வைப் பற்றிய சிந்தனையின்றி வாழ்கின்ற மக்கள் அனைவரும், உமது திருமகனின் உயிர்ப்பிலும் விண்ணேற்றத்திலும் உம்மைக் கண்டுணர உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 3:
தலைசிறந்த அரசரே இறைவா,
எம் நாட்டு மக்களும், தலைவர்களும் உம் திருமகன் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் காட்டவும், தேவையான மனமாற்றத்தை தந்து உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 4:
புதுமைகளின் நாயகரே இறைவா,
எங்கள் ஆண்டவர் இயேசு விண்ணுலகிலும் மண்ணுலகிலும் கொண்டிருக்கும் அதிகா ரத்தால், உலக மக்களின் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணமாக்கும் பணியை திருச்சபை ஆர்வமாக செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 5:
எங்கள் தலைவரே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வை உரித்தாக்கும் மனநிலையுடன் கிறிஸ்துக்கு சான்று பகரும் நற்செய்திப் பணியாளர்களாக வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
''இயேசு பதினொரு சீடர்களையும் அணுகி,...'இதோ! உலக முடிவுவரை எந்நாளும்
நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்'' (மத்தேயு 28:20)
சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம்
மத்தேயு நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க வேண்டும் என்னும் கட்டளையைக் கொடுக்கிறார் (மத் 28:16-20). சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களோடு தொடர்ந்து இருப்பதாகவும் வாக்களிக்கிறார் (மத் 28:20). இது மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே, இயேசு ''இம்மானுவேல்'' என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்டார். ''இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்'' என மத்தேயு தம் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் (மத் 1:22-23). இயேசு வழியாகக் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி, அவர் வழியாக நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நமக்கு ஆறுதல் தருகின்றது. இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும் ''சிலர் ஐயமுற்றார்கள்'' (மத் 20:17). கடவுளையும் அவர் நம்மிடையே அனுப்பிய இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்கிறோம் என்றாலும் நம் நம்பிக்கை எப்போதுமே அசையாத உறுதி கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது. ''ஐயம்'' என்பதற்கு அங்கே இடம் உண்டு. ஆனால் நாம் நம்பிக்கையை இழக்காமல் நிலைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசு ''உலக முடிவுவரை நம்மோடு இருக்கிறார்'' (காண்க: மத் 28:20).
சீடர்களுக்குத் தோன்றிய இயேசு அவர்களுக்கு வழங்கிய கட்டளையில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவர்கள் எல்லா மக்களையும் சீடராக்க வேண்டும்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கவேண்டும்; இயேசு அளித்த கட்டளைகளை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இக்கட்டளையைத் திருச்சபை தொடர்ந்து செயல்படுத்த அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு சில மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கடவுளாட்சி பற்றிக் கற்பித்து, அவர்களைத் தம் சீடராக மாற்றியதுபோல, இன்றும் திருச்சபை இயேசுவின் பெயரால் நற்செய்திப் பணியைத் தொடர வேண்டும். இப்பணியை ஆற்றுவதற்கான ஆற்றலை நாம் இயேசுவிடமிருந்து பெறுகிறோம். திருச்சபை ''எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க'' அனுப்பப்படுகிறது. இயேசுவின் பணி பெரும்பாலும் யூதர்கள் நடுவே நிகழ்ந்தது. ஆனால், உலகில் உள்ள அனைத்து மக்களும் கடவுளின் மீட்பில் பங்கேற்க அழைக்கப்படுவதால் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளை அளிக்கிறார். அக்கட்டளையை நாம் ஏற்று, நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்த வேண்டும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெற வேண்டும். அப்போது நாம் கடவுள் மனிதரிடையே வாழ்கின்றார் என்னும் உண்மைக்குச் சான்றுகளாக மாறுவோம்.
மன்றாட்டு:
இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.