Banner Image

10-05-2026
பாஸ்க்கா காலம் ஆறாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்."
ஆண்டவருக்குரியவர்களே, இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இயேசுவுக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருக்கின்ற உண்மையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மோடு என்றும் இருக்கும்படியாக தூய ஆவியார் என்ற துணையாளரை இயேசு நமக்கு அளித்துள்ளார். தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்புக்கு ஏற்ப இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடித்து, கடவுளை அன்பு செய்கிறவர்களாக வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்8:5-8,14-17
சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
அந்நாள்களில்
பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 66: 1-3a. 4-5. 6-7a. 16,20
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; 2 அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3a கடவுளை நோக்கி, `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். -பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18
மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
அன்புக்குரியவர்களே!
உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14:23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:15-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்: உங்களுக்குள்ளும் இருக்கிறார்.நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்: நீங்களும் வாழ்வீர்கள்.நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
அன்பின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக உமது அன்பின் நற்செய்தி விரைந்து பரவவும், மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்பட வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
அன்பின் அரசே இறைவா,

உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் போர், வன்முறை ஆகியவற்றின் வழிகளைக் கைவிட்டு, மக்களை அன்பிலும் அமைதியிலும் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு,

உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
அன்பு பொழிபவரே இறைவா,

உலகில் பசி, நோய், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் துயருறும் மக்கள் அனைவரும், உமது அன்பின் அரவணைப்பில் புதிய விடியலைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
அன்பு தந்தையே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையுடன் உமது கட்டளைகளைக் கடைபிடித்து, உண்மையின் சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
வாழ்க்கைத் துணைவி, வாழ்வோடு வரும் நட்பு, இரத்தத்தில் பிறந்து வளரும் உறவு உங்களோடு தங்கியிருந்தால், உங்களுக்குள் இருந்தால், ஆகா எப்படி இருக்கும்! இறைவனின் தூய ஆவி இதைச் செய்வதாக இயேசு சொல்லுகிறார். "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரைக்"(யோவான் 14:16) கேட்பேன். "அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்."(யோவா 14:17) அவர் நம்மோடு தங்கியிருந்தால் - சக்கேயு வீட்டில் தங்கியபோது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம், (லூக்19:5) அந்திரேயா திருத்தூதர் பெற்ற இறை அனுபவம்,(யோவான் 1:38) எம்மாவு சீடர்கள் பெற்ற மகிழ்ச்சி (லூக்24:29) நமக்குக் கிடைக்கும். அவர் நமக்குள் இருந்தால் - உடலும் உயிர் பெறும்(உரோ8:11), உரிமை வாழ்வு வாழ்வோம்(உரோ 8:17) தெய்வீக மாட்சியில் வாழ்வோம். ஏனென்றால் "தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்"(உரோ 8:10). இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் போது, இறைவனின் தூய ஆவி இன்றும் நம்மில் தங்கியிருக்கிறார்; நமக்குள் இருக்கிறார். நமது வாழ்க்கைத் துணையின், நண்பர்களின், உறவின் வடிவில் நம்மோடு அவரே இறைவனின் தூய ஆவியே நம்மோடு நமக்குள் தங்கியிருந்து நமக்கு நல் வாழ்வைத் தந்து கொண்டிருக்கிறார். இவர் வழியாக நீங்கள் அனுபவிக்கும் அனைத்திலும் அவர்கள் வழியாக இறைவனின் தூய ஆவியே செயல்படுகிறார். ஆகவே நம் இறைவன் நம்மைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். நம்மோடு தங்கி நம்மை வழிநடத்துவார்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் வழிநடத்தல் இருப்பதால் நாங்கள் தவறிச் செல்லாதிருக்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media