உரோமைச் சூறையாடலின் 500ஆம் ஆண்டு நினைவு
2027ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உரோமைச் சூறையாடலின் 500ஆம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தையின் சுவிஸ் காவல்படை பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. “நீடித்து நிலைக்கும் மதிப்புகள்: விசுவாசம், நம்பகத்தன்மை, தொழில்முறைத் திறன் மற்றும் ஒருமைப்பாடு” என்பது இந்நினைவு ஆண்டின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1527ஆம் ஆண்டு மே 6ஆம் நாள் , திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் அவர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 147 சுவிஸ் காவலர்கள் உரோமை முற்றுகையின்போது உயிரிழந்தனர். மேலும், 42 காவலர்கள் திருத்தந்தையை பாதுகாப்பாக தூய வானதூதரின் கோட்டைக்கு (Castel Sant'Angelo) அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு, சுவிஸ் காவல்படையின் தியாகம் மற்றும் விசுவாசத்தை நினைவுகூரும் முக்கிய வரலாற்றுச் சம்பவமாக அமைந்துள்ளது.
இந்நினைவு நிகழ்ச்சிகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பிரிக் நகரில் வரலாற்று ஆய்வாளர்களின் மாநாட்டுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து, அக்கால அரசியல், இராணுவ மற்றும் சமயச் சூழல்கள் குறித்து ஆய்வு செய்யும் வரலாற்று நூல் ஒன்றும் வெளியிடப்படும்.
ஏப்ரல் 16 முதல் 19ஆம் நாள் வரை சூரிச் நகரின் வசந்தகால விழாவிலும் சுவிஸ் காவல்படை பங்கேற்கும். மே 5 முதல் 7ஆம் நாள் வரை வத்திக்கானில் நடைபெறும் முக்கிய நினைவு நிகழ்ச்சிகளில் மாலைத் திருப்புகழ், உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுப் பலகை திறப்பு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி, புதிய காவலர்களின் உறுதிமொழியேற்பு மற்றும் ஒளிக்கலை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறும்.
செப்டம்பர் 4ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஐன்சிடெல்ன் நகரில் முன்னாள் சுவிஸ் காவலர்களுக்கான தேசிய திருப்பயணமும், திரைப்பட வெளியீடும் இடம்பெறும். இந்நினைவு ஆண்டு, சுவிஸ் காவல்படையின் இன்றைய பணியைப் பற்றிய புரிதலை வளர்ப்பதுடன், வத்திக்கானில் பணியாற்ற இளம் சுவிஸ் ஆண்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.