News

10,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது, மனச்சான்றை தொடவேண்டும

காசா பகுதியில் இஸ்ராயேல் இராணுவம் நடத்திவரும் வெடிகுண்டு தாக்குதலால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளதாக உரைக்கிறது பாலஸ்தீனத்திற்கான மருத்துவ உதவி என்ற குழு.

இஸ்ரயேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ள 10,000 பாலஸ்தீனியர்களுள் 4,000 பேர் குழந்தைகள் எனக்கூறும் இப்பிறரன்பு குழு, 15 இலட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்தவர்களாக வாழ்வதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.

மக்கள் வசிக்கும் வீடுகள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள், கல்வி நிலையங்கள் என எவ்வித பாகுபாடும் பார்க்காமல் இஸ்ராயேல் இராணுவம் தாக்குதலை நடத்திவருவதால் இறப்புக்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது இந்த மருத்துவக்குழு.

குண்டுகளால் உயிரிழக்கும் மக்களுடன், பசியாலும், வயிற்றுப்போக்காலும், தொற்று நோய்களாலும், மருத்துவ வசதிகள் மூடப்படுவதாலும் உயிரிழக்கவிருக்கும் மக்களும் விரைவில் இணையும் ஆபத்து உள்ளது எனக்கூறும் இந்த மருத்துவக்குழு, காசா மருத்துவ மனைகளில் உள்ள 130 குறைமாதக் குழந்தைகளின் வருங்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது எனவும் கவலை தெரிவிக்கிறது.


மிகக் குறுகிய காலத்தில் 10,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதும், இதில் பெருமெண்ணிக்கையில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதும் ஒவ்வொருவரின் மனச்சான்றையும் தொட்டு, இந்நிலை தொடரப்பட அனுமதிக்கக்கூடாது எனவும் விண்ணப்பித்துள்ளது இந்த மருத்துவக்குழு.

முந்தைய அடுத்தது