அகதிகள், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான வரைவுக் கட்டுரை
இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கு, அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகின்றனர் என கவலையை வெளியிட்டுள்ளார் பேராயர் கப்ரியலே காச்சா.
ஐக்கிய நாடுகள் அவையில், அகதிகள், புலம்பெயர்ந்தோர் குறித்து உரையாற்றிய திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதி பேராயர் கப்ரியேலே காச்சா அவர்கள், இயற்கை பேரழிவுகள், வன்முறை, மற்றும் வறுமை காரணமாக பெரும்பான்மையினோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இத்தகைய சூழ்நிலைகளில் இடம்பெயர்தல் என்பது, ஒரு சிறந்த வாழ்க்கைக்கான உலகளாவிய மனித விருப்பத்தின் அடிப்படையில் நெருக்கடிகளுக்கு மனிதனின் இயல்பான பதிலளிப்பாகும் என்றும் கூறினார் பேராயர் கப்ரியலே காச்சா.
ஒரு பரந்த ஒருமித்த கருத்தை வளர்ப்பதற்காக, மாநில நடைமுறை, சர்வதேச சட்டம் மற்றும் தேசிய சட்டம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய சர்வதேச சட்ட ஆணையத்தின் வழி, அடைக்கலம் தேடுவோருக்கு ஆதரவான வரைவுக் கொள்கைகளுக்கு திருப்பீடம் நன்றி தெரிவிக்கிறது என்ற பேராயர் காச்சா, புலம்பெயர்வதைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் உரிமையிலும், அந்நியர்களை வெளியேற்றுவதற்கு உத்தரவாதமளிக்கும் வழக்குகளிலும் இவ்வரைவுக் கொள்கை தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றாலும், அவை மனித உரிமைகள் மற்றும் தேசிய நலன்களை விட மனித மாண்பின் முதன்மையை வலியுறுத்தும் காரணத்தினால் இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் கப்ரியலே காச்சா.
வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாடு கடத்தப்படுபவர்களை எப்போதும் கண்ணியத்துடன் நடத்தல், குடும்ப வாழ்வுக்கான உரிமை, குடும்பப் பிரிவினைத் தடுப்பதற்கு முன்னுரிமை, குழந்தையின் நலனையே அனைத்து முடிவுகளிலும் முதன்மை, வெளியேற்றத்தை எதிர்கொள்ளும் அந்நியர்களுக்கு கணிசமான உரிமைகள் மற்றும் அந்த உரிமைகளைப் பயன்படுத்த தேவையான நடைமுறை வழிகள் வழங்கப்படுவதன் முக்கியத்துவம் ஆகியவைகளை திருப்பீடம் வலுவாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் கப்ரியலே காச்சா.