10,000 பேருக்கு வீடுகளைக் கட்டித்தரும் துறவுசபை
வீடற்றோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் 10,000 பேருக்கு வீடுகளை கட்டித்தரும் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது வின்சென்ட் தெ பால் துறவுசபை.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி புனித வின்சென்ட் தெ பாலின் திருவிழாவைச் சிறப்பிக்கும் இத்துறவுசபை, உலகின் பல்வேறு பகுதிகளில் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழியாக எண்ணற்ற பிறரன்பு மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றது.
இவ்வாண்டுக் கொண்டாட்டங்களின் முக்கியக் கருத்தாக வீடற்றோருக்கு உதவுதலை எடுத்துள்ள வின்சென்ட் தெ பால் துறவுசபை, கடந்த ஆறு ஆண்டுகளாக வீடற்றோரின் பிரச்சனைகளைக் களைவதற்கு தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வந்துள்ளது.
தற்போது 63 நாடுகளில் 101 வெவ்வேறு திட்டங்கள் வழியாக 9350 மக்களுக்கு பயன்தரும் வகையில் உறைவிடங்களைக் கட்டிவரும் இத்துறவுசபை, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 நாடுகளில் 10ஆயிரம் பேருக்கு வீடுகளை வழங்கும் திட்டத்துடன் தன் செயல்பாடுகளைத் துவக்கியுள்ளது.
இவ்வுலகில் ஏறக்குறைய 140 கோடி பேர் ஒழுங்கான உறைவிடங்கள் இல்லாமல் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.