அனைத்துலகிற்கும் அமைதியை அருளட்டும் அன்னை மரியா!
விசுவாசிகள் தங்களின் பாதுகாவலியாம் அன்னை மரியா மீது அன்பையும் மென்மையையும் தொடர்ந்து வளர்த்து பலப்படுத்துமாறு அனைத்து மேய்ப்புப்பணியாளர்களையும் தான் ஊக்குவிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள புனித லூர்து அன்னையின் தேசியத் திருப்பயணம் அதன் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளை, ஆகஸ்ட் 16, இப்புதனன்று அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா கொண்டாட்டத்திற்காகப் புனித லூர்து அன்னை பெருங்கோவிலில் கூடியிருந்த பிரான்ஸ் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த 20,000 திருப்பயணிகளுக்கு தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமுதாயங்கள் மற்றவர்களை மதிக்கும் வகையில் இணக்கமாக வளரவும், அவர்களின் மனித மாண்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும், யாரும் வழிதவறிச் செல்லாமல் இருக்கவும், ஒவ்வொருவரின் இதயத்திலும் உண்மையான உடன்பிறந்த அன்பின் உணர்வுகளை அன்னை மரியா எழுப்பட்டும் என்று உரைத்துள்ளார் திருத்தந்தை.
பெரிய பொறுப்புகளைச் சுமக்கும் பெற்றோர், திறமையில் செழித்திருந்தாலும் தங்கள் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படும் இளையோர், அனுபவத்திலும் ஞானத்திலும் முதிர்ந்திருந்தாலும் பெரும்பாலும் கைவிடப்பட்டு புறக்கணிப்பட்ட நிலையில் வாழும் முதியோர் ஆகியோர் குழுமியுள்ள குடும்பங்களை நம் அன்னை மரியா சிறப்பாகப் பாதுகாக்கட்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் உருக்கமாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.
நோயாளர்கள், தனிமையில் உள்ளவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்லது புலம்பெயர்ந்தோர், துயருறுவோர் அனைவருக்கும் அன்னை மரியா ஆறுதல் வழங்கட்டும் என்றும், அவரின் இந்த ஆறுதலைப் பெறுவதற்காகப் புனித லூர்து அன்னையிடம் வந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான திருப்பயணிகள் அனைவரையும் தான் ஆசீர்வதிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
விண்ணக மகிமையில் இயேசுவினுடைய உடலோடும் ஆன்மாவோடும் அவரை நாம் தியானிக்கும்போது, அவர் நமக்கு வாக்களித்த நிலைவாழ்வைப் பெறுவதற்கான நமது நம்பிக்கையை அவர் வலிமைபெறச் செய்வாராக! என்றும், நமது சகோதரர் சகோதரிகளுக்குக் கிறிஸ்துவின் மறைப்பணியாளர்களாகப் பணியாற்ற அவர் நம்மைத் தூண்டியெழுப்புவராக என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இயேசு மட்டுமே நமது அசைக்க முடியாத நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ள பாறை என்றும், அதன் மீது நாம் நமது வாழ்க்கையையும், நமது சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.