ஜூன் 25, கொரிய ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவிற்கான இறைவேண்டல் நாள்
கொரிய போரின்போது இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பிற்கான ஒரு நாள் செபத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் கொரிய ஆயர்கள்.
கொரிய திருஅவையின் தேசிய ஒப்புரவு அவையும் நீதி மற்றும் அமைதி அவையும் இணைந்து ஜூன் 25ஆம் தேதியை ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவிற்கான இறைவேண்டல் நாளாக அறிவித்துள்ள நிலையில், இதற்காக ஜூன் மாதம் 17 முதல் 25 வரை கொரிய கத்தோலிக்கர் அனைவரும் நவநாள் செபத்தில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இரு கொரிய பகுதிகளுக்கும் இடையேயான மோதலுக்குச் சரியான தீர்வு காணப்படாமல் தொடரும் நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், தென்கொரியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து இராணுவப் பயிற்சிகளையும் தொடர்வது, முடிவுகாண முடியாத ஓர் எல்லையை நோக்கி இப்பிரச்சனையை தள்ளிக்கொண்டுப் போவதாகக் கொரியத் தலத்திருஅவையின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
கொரிய தீபகற்பத்தில் போதிய கருத்துப் பரிமாற்றங்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், மோதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகவும் தலத்திருஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான பாதை மிகத் தொலைதூரமாகவும், தெளிவற்றதாகவும் இருக்கின்றபோதிலும், அங்கு அமைதியைக் கொணர்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கொரிய திருஅவை முயன்றுவருகிறது என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.