நற்செய்தி என்பது மீட்பிற்கான கடவுளின் வல்லமை
நற்செய்தி அறிவிப்பின் ஒவ்வொரு புதிய முயற்சியின் வெற்றியும், கிறிஸ்தவ கோட்பாடுகளின் அடிப்படையை மையமாகக் கொண்டிருப்பது இன்றியமையாதது என்றும், நற்செய்தி என்பது மீட்பளிக்கும் கடவுளின் வல்லமை என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Raniero Cantalamessa
மார்ச் 10 வெள்ளிக்கிழமை 2023ஆம் ஆண்டு தவக்காலத்திற்கான இரண்டாம் சிந்தனையை ”நற்செய்தி கடவுள் மீட்பின் வல்லமை” என்ற கருப்பொருளில் வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa.
நற்செய்தி கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை, நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் அந்த மீட்பு உண்டு என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த கர்தினால் Cantalamessa அவர்கள், கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பின் வழியாக நாம் ஒவ்வொருவரும் மீட்படைகின்றோம், கிறிஸ்து இயேசுவின் அருளால் நாம் மீட்கப்பட்டுள்ளோம், அவர்மீது கொண்ட நம்பிக்கையினால் நீதிமான்களாக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.
பாவத்தைத்தொடர்ந்த மனிதகுலத்தின் நிலைமை, பாவத்திலிருந்து மீள்தல், நம்பிக்கையால் மீட்கப்படுதல், தூய ஆவியைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைத்த கர்தினால் Cantalamessa அவர்கள், தற்போது நம்மோடு வாழ்கின்ற இயேசு ஆளுமை மிக்க மனிதர் என்றும், அவரைப் பற்றிய நற்செய்தி ஆர்வம் நம் உள்ளத்தில் பற்றி எரியவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆன்மாக்களைப் பிடிப்பவர்களாக கடவுள் நம்மை அழைத்துள்ளார் என்றும், இறைவார்த்தையின் ஆழத்திற்குச் சென்று உயிருள்ள இயேசுவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துபவர்களாக வாழவும் வலியுறுத்தினார் கர்தினால் Cantalamessa
கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் Cantalamessa அவர்கள், கத்தோலிக்க ஆன்மீகம் மற்றும் ஆயர் பராமரிப்பு மீட்பை உருவாக்கும் வழியை சந்தேகத்துடன் பார்த்த காலத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
நம்பிக்கை மற்றும் மீட்பை ஒரு தனிப்பட்ட அனுபவமாக கருதுவது, பாரம்பரியத்துடன் உண்மையான உறவு, மற்ற தலத்திருஅவைகளுடன் நம்பிக்கை போன்றவை, பிரிந்த கிறிஸ்தவ சபையினர் வழியாக உலகில் நீரோட்டங்களாக பெருகி நம்பிக்கையை வலுப்படுத்தியதையும் எடுத்துரைத்தார் கர்தினால் Cantalamessa.
வத்திக்கானின் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கான இரண்டாம் வார தவக்கால சிந்தனையின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தனது தவக்கால தியானத்தை தனிப்பட்ட முறையில் செய்துவந்ததால் முதல் வார சிந்தனைப் பகிர்வில் திருத்தந்தையால் பங்குபெற முடியவில்லை.