கடவுள் ஒரு பிரச்சனையை ஒரு புதிய எல்லைக்குத் திருப்புகிறார் source:vaticannews.va
மேரி தெரேசா: வத்திக்கான்
புனித யோசேப்பு, கடவுளின் கொடையாகிய மெசியாவை எவ்வாறு வரவேற்றார் என்பது பற்றி டிசம்பர் 18, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம் வாழ்வின் மிகக் கடினமான நேரங்களை, புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்புக்களாக மாற்றுகிறார் என்று கூறினார்.
ஆண்டவரின் தூதர் இயேசுவின் பிறப்பு பற்றி யோசேப்புக்கு கனவில் தோன்றி கூறியது பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி (மத்.1:18-24) வாசகம் குறித்த தன் சிந்தனைகளை எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாறவிருந்த யோசேப்பு மணஒப்பந்தமாகியிருந்த மரியாவோடு தனது புதிய வாழ்வு, மாண்புள்ள வேலை, பல நல்ல குழந்தைகள் மற்றும், குடும்பம் குறித்து கனவு கண்டுகொண்டிருந்தபோது, மரியா கருவுற்றிருப்பதை அவர் அறியவந்தார் என்று கூறினார்.
நொறுக்கப்படும் கனவுகள்
அந்நேரத்தில் புனித யோசேப்பு, தன்னுடைய கனவுகள் நொறுக்கப்பட்ட நிலையில், திருமணமாகமலேயே கருவுற்றிருந்த மரியாவுக்கு மோசே சட்டப்படி கடினமான தண்டனைகள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவராய், மரியாவை அத்தகைய தண்டனைக்கு உட்படுத்த விரும்பாமலும், அதேநேரம் தன்மீது சுமத்தப்படும் அவமானத்தைப் பொருட்படுத்தாமலும் இரக்கத்தின் வழியைத் தெரிவு செய்ய தன்னை அனுமதிக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.
யோசேப்பு, தனது பிரச்சனைகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தவேளையில், கடவுள் அவரது இதயத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சி, மரியா, தூய ஆவியால் தாய்மைப்பேறு அடைந்திருக்கிறார் மற்றும், பிறக்கவிருக்கும் குழந்தை மீட்பர் என்று அறிவிக்கிறார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, பக்தியுள்ள ஒவ்வொரு இஸ்ரயேலரின் மிகப்பெரிய கனவான மெசியாவுக்குத் தந்தையாக இருப்பதை, கடவுள் தன்னில் நிறைவேற்றவிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இதுவரை நடந்திராத அளவுக்கு மாறுபட்ட வழியில், மரியாவையும் அவரது மகனையும் தான் வரவேற்பதற்கு, தன்னை முழுவதும் கடவுளிடம் அர்ப்பணிக்கவேண்டும் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார் என்று கூறினார்.
நம்பிக்கை, உறுதிமொழி
யோசேப்பு, தனது அனைத்துத் திட்டங்கள், நியாயமான எதிர்பார்ப்புகள் போன்றவற்றைத் துறந்து, கண்டுபிடிக்கப்படவேண்டிய ஒரு வருங்காலத்திற்குத் திறந்தமனம் உள்ளவராக தன்னையே ஆக்கவேண்டிய நிலைக்கு உள்ளானார் என்று கூறியத் திருத்தந்தை, நீதியான மனிதனான அவர் வீரம்கொண்ட துணிச்சலை வெளிப்படுத்தி, கடவுளை முழுமையாக நம்பி அவருக்கு “ஆகட்டும்” என்று பதிலுறுத்தார் மற்றும், வேறு எந்த உறுதிப்பாட்டையும் அவர் கேட்கவில்லை என்று எடுத்துரைத்தார்.
நொறுக்கப்பட்ட கனவுகள், புதிய எல்லைகள்
நாம் அனைவருமே நம் தனிப்பட்ட வாழ்வில் இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம் எனவும், அவை குறித்து கிறிஸ்மஸ் காலத்தில் அடிக்கடி சிந்தித்துப் பார்க்கிறோம் எனவும் உரைத்த திருத்தந்தை, நொறுக்கப்பட்ட கனவுகளைப் புரிந்துகொள்ளும் வழியை யோசேப்பு நமக்குக் காட்டுகிறார் என்றார்.
அவ்வேளைகளில், கோபம் அல்லது தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இடமளிக்கத் தேவையில்லை, மாறாக, வாழ்வில், ஏன் நெருக்கடிகளில்கூட எதிர்கொள்ளும் வியப்புகளை வரவேற்க கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும், நெருக்கடி நேரங்களில் உணர்ச்சிகளுக்கு உட்பட்டு தீர்மானங்களை எடுக்காமல், யோசேப்பு போன்று கடவுளுக்குத் திறந்தமனதோடு இருந்து அவரிடம் நம்மையே முழுமையாகக் கையளிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.