லிபியாவின் சிறார் நோயாளிகளுக்கு வத்திக்கான் மருத்துவமனையில்...
இயேசு தம் பாடுகள் மற்றும், மரணத்தை அறிவித்தபோது, “மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவேன்” (மத்.20:19) என்றுரைத்து, நம்பிக்கையாய் இருப்பது பற்றி எடுத்துரைத்தார் எனவும், அவர் இறைத்தந்தையின் இரக்கத்தால் திறக்கப்பட்டுள்ள வருங்காலம் பற்றிப் பேசினார் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஏப்ரல் 08, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள தன் முதல் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவுசெய்துள்ள திருத்தந்தை, இயேசுவில் நம்பிக்கை கொள்வது மற்றும், அவருக்கு நன்றி தெரிவிப்பது என்பது, இறைத்தந்தையின் மன்னிப்பை, அவரது திறந்த இதயத்திலிருந்து பெறுவது என அர்த்தம் என்று கூறியுள்ளார்.
மேலும், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “தொடர்ந்து விழுகின்ற நடக்க முயற்சிக்கும் சிறு பிள்ளைகள் போன்று நாம் இருக்கிறோம், அப்பிள்ளைகள் விழுகின்ற ஒவ்வொரு நேரமும் அவர்களைத் தூக்கிவிட அவர்களின் தந்தை தேவைப்படுகிறார். இறைத்தந்தையின் மன்னிப்பு, நம்மை எப்போதும் தூக்கி நிறுத்துகிறது. ஆண்டவரிடம் திரும்பிவர ஒப்புரவு அருளடையாளம் முதல் படி” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
லிபியாவின் சிறார் நோயாளிகளுக்கு சிகிச்சை
மேலும், லிபியாவில் கடும் நோயாய்ப் பாதிக்கப்பட்டுள்ள 25 சிறாருக்குச் சிகிச்சை அளிப்பதற்கு, இத்தாலிய வளர்ச்சி மற்றும், ஒத்துழைப்பு நிறுவனத்தோடு, வத்திக்கானின் பம்பினோ ஜேசு அதாவது குழந்தை இயேசு சிறார் மருத்துவமனை ஒப்பந்தம் ஒன்றில், ஏப்ரல் 07, இவ்வியாழனன்று கையெழுத்திட்டுள்ளது.
லிபியா நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற போர், மற்றும், நிலையற்றதன்மை ஆகியவற்றின் பாதிப்புக்களால் அடிக்கடி இடம்பெறும் மின்தடை, மருந்துகள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால், அந்நாட்டில், மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனையும், இத்துன்பநிலையை அதிகரித்துள்ளது.
இந்நிலையால், லிபியாவில் சிகிச்சை அளிக்கப்படமுடியாத 25 நோயாளிச் சிறார் வத்திக்கானின் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளனர். இச்சிகிச்சைக்கு, இத்தாலிய வளர்ச்சி மற்றும், ஒத்துழைப்பு நிறுவனம், 24 இலட்சத்து 25 ஆயிரம் யூரோக்களை வழங்க இசைவு தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் புற்றநோயால் தாக்கப்பட்டிருந்த லிபியாவின் 12 இளம் சிறாருக்கு வத்திக்கானின் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.