அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்ததில் இரஷ்ய கத்தோலிக்கர் நம்பிக்கை
உலகமனைத்தையும், குறிப்பாக, இரஷ்யா, மற்றும், உக்ரைன் ஆகிய இரு நாடுகளை அன்னை மரியாவின் களங்கமில்லா திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பது, நம்பிக்கையின் அன்னையாகிய மரியா மீது, கத்தோலிக்கர், வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என்று, மாஸ்கோ, இறையன்னை உயர்மறைமாவட்ட முதன்மை குரு Kirill Gorbunov அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகையும், இவ்விரு நாடுகளையும், அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தது குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அருள்பணி Gorbunov அவர்கள், இந்நிகழ்வு, புனித கன்னி மரியா மீது நாம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கை மற்றும் பக்தியின் வெளிப்பாடாகவும், இது, போர்கள் அனைத்தும் முடிவுறும் என்பதற்கு ஒரு மாயவித்தை அல்ல எனவும் குறிப்பிட்டார்.
திருத்தந்தை இந்நிகழ்வை மேற்கொண்டதன் முக்கியத்துவம், இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்து போரிட்டுவரும் இவ்வேளையில் இரஷ்யர்களின் மனநிலை என்ன? இந்த அர்ப்பணிப்பு கத்தோலிக்கருக்கு மட்டுமா அல்லது மற்ற மக்களுக்கும் உரியதா? போன்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார், அருள்பணி Gorbunov.
இந்த அர்ப்பண நிகழ்வு, உக்ரைனில் தற்போதுள்ள நிலவரத்தை மாற்றுவதற்கு சில புதுமையை ஆற்றும் என்ற ஏமாற்று செயல் அல்ல என்றும், ஆயினும், இப்பெருந்துயருக்கு ஓர் அமைதியான தீர்வு காண மக்களின் மனங்களில் ஒரு மாற்றத்தை இது உருவாக்கும் என்று நம்புகிறோம் என்றும், அருள்பணி Gorbunov அவர்கள் கூறினார்.
தற்போதைய நிலவரம் இரஷ்யாவிலுள்ள எமக்கு அதிர்ச்சியாகவும், நிச்சயமற்ற உணர்வையும் கொடுத்துள்ளது என்றும், இந்த மாதிரிப் போர் இடம்பெறும் என்று எவருமே நினைத்துப் பார்க்கவில்லை என்றும் உரைத்த அருள்பணி Gorbunov அவர்கள், அமைதி மற்றும் உரையாடலின் அவசியம் குறித்தும் வலியுறுத்திக் கூறினார்.
மார்ச் 25, இவ்வெள்ளி உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் துவங்கிய "ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்" என்ற தவக்கால திருவழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்து ஆயர்களோடு ஆன்மீக முறையில் ஒன்றித்து, இரஷ்யாவையும், உக்ரைனையும் அன்னை மரியாவின் களங்கமற்ற திருஇதயத்திற்கு அர்ப்பணித்து செபித்தார்.