News

உக்ரைன் சிறாரின் இரத்தமும் கண்ணீரும் மனச்சான்றை உலுக்குகின்றன

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரால் உருவாகியுள்ள மிகப்பெரும் மனிதாபிமானப் பெருந்துயர் குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, போர், அரசியல் மற்றும், மனித சமுதாயத்தின் தோல்வி என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சுலோவாக்கியா நாட்டின் பிராட்டிஸ்லாவா நகரில், மார்ச் 17, இவ்வியாழனன்று ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ள, மூன்றாவது ஐரோப்பிய கத்தோலிக்க சமுதாய நாள்கள் என்ற கருத்தரங்கத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போரின் பெருந்துயர்

CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் தலைவரான, வில்னியுஸ் பேராயர் Gintaras Grušas அவர்களுக்கு மார்ச் 18, இவ்வெள்ளியன்று வாழ்த்துக்கூறி அனுப்பியுள்ள செய்தியில், உக்ரைன் சிறாரின் இரத்தமும் கண்ணீரும் நம் மனச்சான்றை உலுக்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நாம் இந்நாள்களில் எதிர்கொண்டுவரும் துயரநிகழ்வுகள், கோவிட்-19 பெருந்தொற்று முடிவுற்றபின்னர் நாம் எதிர்பார்த்தவை அல்ல என்றும், தற்போது ஐரோப்பாவின் இதயத்தில் இடம்பெற்றுவரும் போர் நம்மை வியப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும், கடந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொண்ட பெரும் போர்களின் அழிவுகளை மீண்டும் காண்போம் என்று, ஒருபோதும் நாம் நினைத்ததே கிடையாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

போருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறும் ஏராளமான மக்களை வரவேற்று, பாதுகாப்பு அளிப்பதில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணையவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, ஐரோப்பாவின் சுவர்கள், நுழைவாயில்களாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டு நம் சகோதரர் சகோதரிகள் எழுப்புகின்ற அழுகுரல்கள் உதவிக்காக விண்ணப்பிக்கின்றன என்றும், நாம் அவர்களோடு சேர்ந்து அழுவதோடு, அவர்களுக்கு ஏதாவது உதவிகள் ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், மற்றும், வீணான ஆதாயநோக்கால், மனித சமுதாயம் மீண்டுமொருமுறை அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“பெருந்தொற்றுக்கு அப்பால் உள்ள ஐரோப்பா: புதியதொரு துவக்கம்” என்ற தலைப்புடன், நடைபெற்றுவரும் இந்த நான்கு நாள் கருத்தரங்கம், மார்ச் 20, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

இந்த தலைப்பு பற்றியும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய சமுதாயத்தில் இடம்பெற்றுவரும் மாற்றங்கள் குறித்து சிந்திப்பதற்கு இது அழைப்புவிடுக்கிறது என்று கூறி, உடன்பிறப்பு உணர்வுநிலை வளரவேண்டுமென்ற தன் ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

முந்தைய அடுத்தது