உக்ரைனில் புலம்பெயர்ந்தோருடன் இந்திய அருள்சகோதரி
உக்ரைனில் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, கடவுள் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என்று, அந்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவரும் இந்திய அருள்சகோதரி Ligy Payyappilly அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மேற்கிலுள்ள Mukachevo நகரில் பணியாற்றுகின்ற, புனிதர்கள் யோவான், மற்றும் மாற்கு அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Ligy அவர்கள், இந்நகர் வழியாக சுலோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயரும் உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறியுள்ளார்.
தனது சபையின் 17 அருள்சகோதரிகளோடு சேர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் 48 வயது நிரம்பிய அருள்சகோதரி Ligy அவர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், காவல்துறை மிகப்பெரிய பணியை ஆற்றுவதாகவும், இந்திய மாணவர்களில் பலர் நாட்டிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1845ம் ஆண்டில் பிரான்சில் அருள்பணி Pierre Paul Blanck அவர்களால் புனிதர்கள் யோவான், மற்றும் மாற்கு அருள்சகோதரிகள் சபை ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த அருள்சகோதரி Ligy அவர்கள், Mukachevo கன்னியர் இல்லத்தின் தலைவராகப் பணியாற்றுகின்றார். (AsiaNews)
உலகளாவிய சட்டம் மீறப்படுவதை தடுக்க நடவடிக்கை
உக்ரைன் நாட்டை இரஷ்யா ஆக்ரமித்திருக்கும் இவ்வேளையில், அந்நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்குவதில், ஐ.நா.வின் உறுப்பு நாடுகள், தங்களின் ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் ஒன்றிணைந்து வெளிப்படுத்துமாறு, ஐ.நா.வின் தலைமை பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் இடம்பெறும் போரில் உலகளாவிய சட்டம் மீறப்படுவதை தடுப்பதற்கும் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள், தங்களின் ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் வழங்குமாறும், கூட்டேரஸ் அவர்கள் ஐ.நா. பொது அவையில், மார்ச் 10, இவ்வியாழனன்று விண்ணப்பித்துள்ளார். (UN)