News

இத்தாலிய Alpine கழகத்தின் பணிகளுக்கு திருத்தந்தை பாராட்டு

இளையோர் செங்குத்தான மலை உச்சிகளில் ஏறுவதற்கும், படைப்பு மற்றும், காயமடைந்துள்ள நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கும் உதவிவரும், இத்தாலிய Alpine தேசிய கழகத்தினருக்கு, தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய இராணுவத்தில், மலைப்பகுதியில் சிறப்பாகச் செயல்படும் Alpine படைப்பிரிவு, இவ்வாண்டில் தன் 150வது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதையொட்டி, அவ்வமைப்பின் 150 பிரதிநிதிகள், பிப்ரவரி 26, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து ஆசிர்பெற்றனர்.

முதல் மற்றும், இரண்டாம் உலகப் போர்களில் சிறப்பாகப் பணியாற்றிய இத்தேசியக் கழகத்தின் கிளைகள், இத்தாலியில் மட்டுமல்லாமல், அர்ஜென்டீனா நாடு உட்பட உலகின் பல பகுதிகளில் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த கழகத்தினர், உடன்பிறப்பு உணர்வு மற்றும், சேவை ஆகிய இரு பண்புகளுக்குச் சான்றுகளாயத் திகழ்கின்றனர் என்று பாராட்டினார்.

உடன்பிறந்த உணர்வு

Alpine படைப்பிரிவு, ஒரு நூற்றாண்டளவாக, ஒரு குடும்பமாகச் செயல்படுவதைக் காண முடிகின்றது என்றும், இராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்களோடும், பல்வேறு பிறரன்பு நிறுவனங்களோடும் இந்த படைப்பிரிவு ஒத்துழைப்பு வழங்க நன்மனம் காட்டி வருகின்றது என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, தனிமனிதப்போக்கால் துன்புற்றுவரும் இன்றைய சமுதாயத்திற்கு, மற்றவரைப் பராமரிப்பதில் ஆர்வத்தைத் தூண்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மற்றவருக்குப் பணியாற்றுவதன் வழியாக, உடன்பிறப்பு உணர்வு பேணி வளர்க்கப்படவேண்டும் என்றும், Alpine படைப்பிரிவு, தன் தன்னார்வச் செயல்களால் இந்த நல்லுணர்வுக்குச் சான்றாக விளங்குகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கழகத்தினர் இந்த உடன்பிறப்பு உணர்வை, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆற்றிவரும் சேவைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற நற்செய்திக் கூற்றுக்கு, இந்த படைப்பிரிவினர் சான்றாக உள்ளனர் என்றுரைத்து, அவர்களின் பணிகளை ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய Alpine தேசிய கழகம், 1919ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தக் கழகத்தின் பாதுகாவலர் புனித மவ்ரிசியோ. அவரின் திருநாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

முந்தைய அடுத்தது