News

ஒன்றிணைந்து செயல்படுவது நம் ஒன்றிப்பை காணக்கூடியதாக்குகிறது

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பாதுகாவலரான திருத்தூதர் புனித அந்திரேயாவின் திருநாளாகிய நவம்பர் 30, இச்செவ்வாயன்று, அச்சபையின் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இருவருக்கும் இடையே நிலவும் உடன்பிறப்பு உணர்வுகொண்ட நட்புறவில் மட்டுமல்ல, உரோம் திருஅவைக்கும், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைக்கும் இடையே நிலவும், நம்பிக்கை மற்றும், பிறரன்பின் பழமையான மற்றும், ஆழமான பிணைப்பினாலும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும்தந்தையின் புனித ஜார்ஜ் பேராயத்தில் திருவழிபாட்டிற்காகக் கூடியிருக்கும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் எனது நல்வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இக்கால மற்றும், வருங்கால உலகு சார்ந்த நமது பொதுவான அக்கறையை மட்டுமல்ல, படைப்பைப் பாதுகாத்தல், வருங்காலத் தலைமுறைகளின் கல்வி, பல்வேறு மதங்கள் மத்தியில் உரையாடல் மற்றும், அமைதியை ஊக்குவித்தல் உட்பட, மனித குடும்பம் முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில், நாம் இருவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிஎடுத்திருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களின் அண்மை உரோம் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதிப்பாட்டால், இவ்விரு திருஅவைகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவும் ஆழமான பிணைப்பு கூடுதலாக வலுப்படுத்தப்படும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பொதுவான பிணைப்பு, காணக்கூடியமுறையில் விளங்கும் வழிகளை, மனஉறுதியோடு தேடுவோம் என்றும் கூறியுள்ளார்.

உரோம் மற்றும், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைகளுக்கு இடையே இடம்பெற்றுவரும் இறையியல் உரையாடல் பணிகளில், இறையியல் மற்றும், திருஅவை சார்ந்த கேள்விகள் முக்கிய இடம்வகித்துள்ளன என்றுரைத்துள்ள திருத்தந்தை, இவ்விரு துறைகளிலும் உரையாடல் தொடர்ந்து இடம்பெற்று, நல்லதொரு தீர்வு காண்பது இயலாததல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஏங்குகின்ற, நம் இரு திருஅவைகளுக்கு இடையே நிலவும் முழு ஒன்றிப்பு, தூய ஆவியாரின் அருளால், கடவுளிடமிருந்து பெறும் கொடையாகும் எனவும், இறைவேண்டல், மனமாற்றம், மன்னிப்பை வழங்குவதற்குத் திறந்தமனம் ஆகியவை வழியாக, இக்கொடையை நாம் ஏற்பதற்கு ஆண்டவர் நமக்கு உதவுவாராக எனவும், தன் நவ்வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித அந்திரேயாவின் திருநாளன்று, திருப்பீட பிரதிநிதி குழு ஒன்று கான்ஸ்தாந்திநோபிள் செல்வதும், புனித பேதுரு திருநாளன்று, முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று வத்திக்கான் வருவதும் பாரம்பரியமாக இடம்பெற்று வருகிறது.

முந்தைய அடுத்தது