News

மறைப்பணிகளுக்கென கொரிய கத்தோலிக்கர் செபமாலைகள்

மறைப்பணி நாடுகளில் பணியாற்றுவோருக்கு உதவுவதற்கென்று, தென் கொரியா நாட்டுக் கத்தோலிக்கர், செபமாலைகள் தயாரித்து வருகின்றனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது.

Suwon மறைமாவட்டத்தின் Sanbon-dong பங்குத்தளத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர், ஆப்ரிக்கா மற்றும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பணியாற்றும் மறைப்பணியாளர்களுக்கு உதவுவதெற்கென்று, புதிய பொருள்கள், மற்றும், மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய செபமாலைகள் ஆகியவற்றிலிருந்து 18 மாதங்களுக்கு மேலாக, கைகளால் செபமாலைகளைத் தயாரித்துவருகின்றனர்.

இத்தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, Sanbon-dong பங்குத்தளத்தின் செபமாலை பக்த சபையினர், இச்செபமாலைகளை இணையதளத்தில் விற்று அவற்றிலிருந்து கிடைக்கும் பணத்தை மறைப்பணி நாடுகளுக்கு அனுப்பிவருகின்றனர். அதோடு, அச்செபமாலைகளை, மறைப்பணி நாடுகளுக்கு, குறிப்பாக, அந்நாடுகளில் முதன்முறையாக திருநற்கருணை வாங்கும் சிறாருக்குப் பரிசாக வழங்கிவருகின்றனர். தங்கள் பங்குத்தளத்திலுள்ள மற்ற கத்தோலிக்கர் மத்தியில் செபமாலை செபிக்கவும் ஊக்குவித்து வருகின்றனர்.

செபமாலை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில், 35 பேர் இப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என்று யூக்கா செய்தி நிறுவனம், கூறியுள்ளது.

Sanbon-dong பங்குத்தள ஆலயம், செபமாலை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு, கடந்த 2020ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டபோது. அந்நிகழ்வில், ஒரு கோடிச் செபமாலைகளைச் செய்து மறைப்பணி நாடுகளுக்கு அனுப்பும் திட்டம் உதித்தது என்று யூக்கா செய்தி மேலும் கூறியுள்ளது. (UCAN)

முந்தைய அடுத்தது