News

பெரூஜியா-அசிசி 60வது நடைபயணம் – திருத்தந்தை செய்தி

உலக அமைதி வேண்டி, இத்தாலியின் பெரூஜியா நகரிலிருந்து, அசிசி நகர் நோக்கி நடைபெற்ற 60வது நடைப்பயணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன் பாராட்டுக்களையும், இறை வேண்டுதல்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மடல் வழியே தெரிவித்துள்ளார்.

1961ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுவரும் பெரூஜியா-அசிசி நடைபயணம், இவ்வாண்டு, அக்டோபர் 9,10 ஆகிய நாள்கள் நடைபெற்றதையொட்டி, அசிசி ஆயராகப் பணியாற்றும் பேராயர் Domenico Sorrentino அவர்களுக்கு, திருத்தந்தை, தன் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.

"அமைதியின் புதிய பெயர் அக்கறை" என்ற மையக்கருத்துடன் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கறை என்ற கருத்து, தற்போதையை உலகில், பல நிலைகளில் பேசப்பட்டு வருகிறது என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அக்கறையற்ற நிலை, வெறுப்பு, வன்முறை ஆகியவை பெருகியுள்ள இவ்வுலகில், அக்கறை காட்டும் கலாச்சாரம், மனிதர்களிடையில் வளர்ந்து, அந்த அக்கறை, படைப்பின் மீதும் காட்டப்படவேண்டும் என்று, திருத்தந்தை, தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உலக அவைகளில் அமைதியைக் குறித்த அறிக்கைகள் வெளியாகிவரும் அதே வேளையில், அமைதியைக் குலைக்கும் போர்க்கருவிகளுக்கு ஒவ்வோர் அரசும் அதிக நிதியை ஒதுக்குவது குறித்து, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வெளிவேட நிலையை மாற்ற, அக்கறைகாட்டும் சமுதாயத்தை வளர்ப்பது நம் கடமை என்று கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபயணம் மேற்கொள்வது மட்டும், உலகில் அக்கறையை வளர்க்க, போதுமான முயற்சி அல்ல என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை, ஒவ்வொரு நாளும், நம் தினசரி வாழ்வில், இந்த அக்கறையை, மனிதர்கள் மீதும், படைப்பு அனைத்தின் மீதும் வளர்ப்பது, நம் அனைவருக்கும் உள்ள கடமை என்று கூறி, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

முந்தைய அடுத்தது