News

அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவது ஒன்றே சிறந்த வழி

அணு ஆயுதப் போர் என்ற அச்சத்தை, இவ்வுலகிலிருந்து அறவே ஒழிப்பதற்கு, உலக அளவில் அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவது ஒன்றே சிறந்த வழி என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், ஐ.நா. அவையின் கூட்டமொன்றில் கூறினார்.

அணு ஆயுதங்களின் முழுமையான ஒழிப்பு உலக நாள் அண்மையில் கடைபிடிக்கப்பட்டதையொட்டி ஐ.நா. நிறுவனத்தின் பொது அமர்வில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், அணு ஆயுத உற்பத்தியைத் தடுப்பது, தற்போதுள்ள அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்வது என்ற இரு முயற்சிகளுக்கும் திருப்பீடத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்று குறிப்பிட்டார்.

நாடுகளுக்கிடையே உருவாகும் நம்பிக்கையின் அடிப்படையில் உலக அமைதி உருவாகவேண்டுமே தவிர, நாடுகள் அனைத்தும் சமமான அளவு ஆயுதங்களை குவித்து வைப்பதன் அடிப்படையில் அல்ல என்று, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 'உலகில் அமைதி' (Pacem in Terris) என்ற தலைப்பில் உருவாக்கிய திருமடலில் கூறியிருப்பதை பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மக்களைப் பாதுகாப்பதற்கும், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் தேவையான நிதியை, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதங்களுக்காக செலவிடுவது, நம்மிடையே, இன்னும் அதிகமான பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

அணு ஆயுதங்களைத் தடுக்கும் ஒப்பந்தம் இவ்வாண்டு சனவரி மாதம் வெளியானதற்காகவும், அந்த ஒப்பந்தத்தில் உலகின் 122 நாடுகள் கையொப்பமிட்டதற்காகவும் திருப்பீடத்தின் சார்பில் தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்ட பேராயர் காலகர் அவர்கள், இந்த ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் விரைவில் கையொப்பமிடுவதற்கு திருப்பீடம் விண்ணப்பிக்கிறது என்று கூறி, தன் உரையை நிறைவுசெய்தார்.

முந்தைய அடுத்தது