News

திருநற்கருணைக்கு முன் இளம் “Jorge Bergoglio”

திருநற்கருணைக்கு முன் இரவு கண்விழித்து செபிக்கும் பக்தர்களில் தானும் ஒருவன் என்ற நினைவை மீண்டும் தூண்டிவிட்ட இஸ்பானிய இதழுக்கு நன்றி கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய ஒரு குறிப்பை, இவ்விதழுக்கு அனுப்பிவைத்தார்.

1950களில், திருநற்கருணைக்கு முன் விழித்திருந்து செபித்த தன் பெயரை ஒரு புகைப்பட நகலாக வெளியிட்டிருந்த Alpha and Omega இஸ்பானிய வார இதழின் முயற்சி, தன்னில் ஆழ்ந்த உணர்வுகளை ஏற்படுத்தியது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டீனாவின் புயெனஸ் அயிரஸ் பெருங்கோவிலில் “Jorge Bergoglio” மற்றும், அவரது தம்பி, “Oscar Bergoglio” ஆகிய இருவரும் இரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்ததை குறிப்பிட்டுள்ள பக்கங்களை Alpha and Omega வார இதழ் வெளியிட்டிருந்தது.

புயெனஸ் அயிரஸ் பெருநகரின் அருகில் தாங்கள் வாழ்ந்து வந்த Flores என்ற பகுதியிலிருந்து, தானும், தன் தம்பி ஆஸ்கர் அவர்களும், இந்த பெருங்கோவிலுக்கு அடிக்கடி சென்று, திருநற்கருணை ஆராதனையில் ஈடுபட்ட நினைவுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

முழு இரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆராதனை நேரம் முடிந்ததும், அடுத்து ஆராதனை மேற்கொள்ளவிருப்பவரை, “Venite adoremus” அதாவது, 'வாருங்கள் வணங்குவோம்' என்று கூறி எழுப்புவதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “Venite adoremus” என்ற சொற்களை இன்றும் தான் கேட்கும்போது, தன் இளமைக்கால நினைவுகள் மீண்டும் எழுகின்றன என்று எழுதியுள்ளார்.

1950களில் மாலை திருப்பலிகள் இல்லாததாலும், சனிக்கிழமை மாலைகளில் பலரும் விருந்துகளுக்கு செல்வதால், கோவில்களில் யாரும் இல்லாததாலும், அவ்வேளையில், தானும் தன் தம்பியும் கோவிலுக்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொண்டதாகவும், இந்த திருநற்கருணை வழிபாடுகள், இரவு 9 மணி முதல் துவங்கும் என்றும், Alpha and Omega என்ற இதழுக்கு அனுப்பிய குறிப்பில் திருத்தந்தை எழுதியுள்ளார்.

முந்தைய அடுத்தது