News

பிப்ரவரி 12, 2021: வத்திக்கான் வானொலியின் வயது 90

பிப்ரவரி 12, வருகிற வெள்ளியன்று, வத்திக்கான் வானொலி, தன் பணியில், 90 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, இவ்வானொலியின் முன்னாள் இயக்குனராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி (Federico Lombardi) அவர்கள், லா சிவில்த்தா கத்தோலிக்கா (La Civiltà Cattolica) என்ற இதழில் சிறப்பு கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார்.

வானொலி என்ற வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்பை உருவாக்கிய Guglielmo Marconi அவர்கள், 90 ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வத்திக்கான் வானொலியை உருவாக்கி, அதை, இயேசு சபை அருள்பணியாளர் Giuseppe Gianfranceschi அவர்களிடம் ஒப்படைத்தார்.

வத்திக்கான் அரசு உருவாகிவந்தவேளையில், அந்த அரசின் கருத்துக்களை உலகறியச் செய்வதற்கு, 1931ம் ஆண்டு வத்திக்கான் வானொலி நிறுவப்பட்டபோது, அன்றைய காலக்கட்டத்தில், இந்த நிலையம், அறிவியலில் முன்னணி இடத்தை வகித்தது.

1930களில் பல்வேறு உலக அரசுகள், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மீது திணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவேளையில், உண்மையை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் வானொலியைத் துவக்கியது, உண்மையிலேயே துணிவு நிறைந்த ஒரு முடிவு என்பதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வானொலியின் முதல் இயக்குனர் இயேசு சபை அருள்பணி Gianfranceschi அவர்களுக்குப்பின் பொறுப்பேற்ற இயேசு சபை அருள்பணி Filippo Soccorsi அவர்கள், 1936ம் ஆண்டு, இந்த வானொலியை அனைத்துலக வானொலி கழகத்தின் ஓர் உறுப்பினராக இணைத்ததுடன், பல்வேறு நாடுகளின் இயேசு சபை அருள்பணியாளர்கள், இந்த வானொலியில் பணியாற்ற வழிவகுத்தார்.

இரண்டாம் உலகப் போர் மூண்டுவந்த 1939ம் ஆண்டில், இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானியம், போர்த்துகீசியம், போலந்து, உக்ரைன், லித்துவேனியா ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துவந்த வேளையில், பல நாடுகளில் பொது மக்களின் தொடர்புகள் தடை செய்யப்பட்ட வேளையில், வத்திக்கான் வானொலி உண்மையை எடுத்துரைக்கும் ஒரே தொடர்பு சாதனமாக, ஐரோப்பிய மக்களுக்கு விளங்கவேண்டும் என்பதில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் மிகவும் அக்கறை காட்டினார்.

போரில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும், அவர்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகவும் வழிவகுத்த வத்திக்கான் வானொலி, 1940க்கும், ‘46க்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில், வீரர்களுக்கும், குடும்பங்களுக்கும் இடையே 1,240,728 தகவல்கள் பரிமாறப்படுவதற்கு உதவி செய்தது.

இவ்வாறு, 'திருத்தந்தையின் குரலொலியாக' கடந்த 90 ஆண்டுகளில் வத்திக்கான் வானொலி ஆற்றி வந்துள்ள பணிகளை, அருள்பணி Lombardi அவர்கள் இக்கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழ் ஒலிபரப்பு

வத்திக்கான் வானொலியில், 1965ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பமானது. வாரத்திற்கு இரண்டு நாள்கள், பின்னர், வாரத்திற்கு நான்கு நாள்கள் என்று இடம்பெற்ற தமிழ் ஒலிபரப்பு, 1986ம் ஆண்டு சனவரி 7ம் தேதியன்று, தினசரி ஒலிபரப்பாக மாறியது.

முந்தைய அடுத்தது