News

மகிழ்வின் மந்திரம் - குழந்தைக்கும் தாய்க்கும் இடையே நெருக்கம்

"அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலில் 30 பத்திகள் அடங்கிய முதல் பிரிவின் இறுதி எண்ணமாக, "ஓர் அரவணைப்பில் மென்மை" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கியுள்ள கருத்துக்களில் இன்று, 28ம் பத்தி குறித்து காண்போம்.

திருமணம் மற்றும், குடும்பம் வழஙகும், கிறிஸ்தவ அனுபவத்தின் மையமாக இருக்கும் அன்பின் பின்னணியில் பிறிதொரு குணநலனும் மேலோங்கி நிற்கிறது. இது இன்றைய மேம்போக்கான நிலைகளால், கண்டும் காணாமல் போய்விடக்கூடிய, 'மென்மை' என்ற நற்பண்பு. திருப்பாடல் 131ன் வார்த்தைகளை நோக்குவது சிறப்பு. ஏனைய விவிலிய நூல்களிலும் (காண்க. வி.ப. 4:22; எசா.49:15; தி.பா. 27:10), இறைவனுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நிலவும் பிணைப்பு, பெற்றோரின் அன்பாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு நாம், குழந்தைக்கும், தாய்க்கும் இடையே நிலவும் மென்மையான நெருக்கத்தைக் காண்கிறோம். பால்குடித்தபின் தாயின் கரங்களில் உறங்கும் குழந்தையாக, அது உருவகப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். 'gamûl' என்ற எபிரேய வார்த்தை குறிப்பதுபோல், பால் குடித்த குழந்தை, தன் தாயின் கரங்களுக்குள் அடைக்கலம் தேடுகிறது, அத்தாயும் தன் மார்போடு குழந்தையை அரவணைத்துக் கொள்கிறார். இது உயிரியலுடன் இயல்பாகவே தொடர்பான ஒன்று மட்டுமல்ல, உணர்வுகளோடு இணைந்த நெருக்கமுமாகும். இதைத்தான் திருப்பாடல் ஆசிரியரும், 'என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது (தி.பா.131:2) என்கிறார். இறைவனின் உதடுகளில் இறைவாக்கினார் ஒசேயா இடும், உணர்ச்சி நிரம்பிய வார்த்தைகளையும் இங்கு நினைவுகூர்வது சிறப்பு:

இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது, அவன்மேல் அன்பு கூர்ந்தேன்;......அவர்களைக் கையிலேந்தியதும் நானே;......பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன் (ஒசே 11:1, 3-4).

இவ்வாறு, இறைவனுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நிலவும் உறவை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே காணப்படும் நெருங்கிய உறவாக காட்டுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (அன்பின் மகிழ்வு 28).

முந்தைய அடுத்தது