கேவலார் அன்னையின் 39வது ஆண்டு பெருவிழா 2026
மருதமடு அன்னையின் திருநாளில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா.
இவ்வாண்டு, 39வது தடவையாக கேவலார் அன்னையின் திருத்தலத்தில் நாம் ஒன்றுகூடுகின்றோம். இந்த புனித நாளை சிறப்பிக்க குடும்பங்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். வாருங்கள்! கேவலார் அன்னையின் திருத்தலத்தில் ஒன்றிணைந்து செபித்து, இறைவனின் ஆசீர்வாதத்தையும் அன்னையின் பரிந்துரையையும் பெற்றுக்கொள்வோம்.
வழிபாட்டு நிகழ்ச்சிகள்
07.08.2026 — வெள்ளிக்கிழமை
08.08.2026 — சனிக்கிழமை
இன்றைய நாளில் நடைபெறும் கேவலார் புனிதப்பயணத்தை, திருமலை மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி கலாநிதி Dr. போல் ரோபின்சன் அடிகளார் தலைமை தாங்கிச் சிறப்பிக்கிறார்.
திருவிழாவைச் சிறப்பிக்க வருகை தருகிறார் Rev. Dr. Paul Robinson

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு நடைபெறும் எமது திருவிழாவில் ஆன்மீக அருளுரையையும் இறையாசீர்வாதத்தையும் வழங்குவதற்காக, திருகோணமலை மறைமாவட்டத்தின் மதிப்பிற்குரிய குருமுதல்வர் அருட்பணி கலாநிதி Dr. போல் ரோபின்சன் அவர்கள் வருகை தரவுள்ளனர்.
அவரை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறோம்.
கேவலார் திருத்தல முகவரி
Wallfahrt Kevelaer
Kapellenplatz 35
47623 Kevelaer
கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
ஓட்டுநர்களுக்கான குறிப்பு
கோவிலை நெருங்கும் போது ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் நகரசபையை அடைந்தும் அங்கு உங்கள் வழிகாட்டியை (Navi) நிறுத்துமாறு அடையாளம் இடப்பட்டுள்ளது.
அங்கு இருந்து நீங்கள் வழிசெலுத்தல் அமைப்பை (Navi) நிறுத்திவிட்டு, தமிழ் மற்றும் ஜெர்மன் மொழிகளில் தகவல் பலகையை பின்பற்றினால் உங்கள் இலக்கை நீங்கள் பாதுகாப்பாக அடையலாம்.
பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாசல்கள் மற்றும் வைத்திய உதவி வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு கேவலார் நகர நிர்வாகம் கண்டிப்பாக அறிவித்துள்ளது.
புனிதத்தலத்திற்கு வாகனங்களில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் தரப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி கீழ்க்கண்ட இடத்தில் இலவசமாக வாகனங்களை தரிப்பிடத்தில் நிறுத்தலாம்.
- Sportzentrum Hüls
Hüls 13,
47623 Kevelaer
(விளையாட்டுமைதானம்/உள்நீச்சல்குளம்)
நீங்கள் கேவலாரை அண்மித்ததும் திருவிழாப்பணியாளர்களதும், நகர காவலர்களினதும் உதவியுடன் உங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆலயத்தைச் சென்றடையலாம். திருவிழா நிறைவு பெற்றதும் நகர உட்பாதைகளைத் தவிர்த்து, வந்த பாதையின் வழியே வீடு திரும்பலாம்.
இப்பாதை மாற்றத்தினால் ஏற்படும் நேர தாமதத்தைத் தவிர்க்க உங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்குங்கள்.

முதல்நன்மை சிறார்களுக்கு அழைப்பு

இவ்வருடம் முதல்நன்மை பெற்ற சிறார்கள் கேவலார் யாத்திரை திருப்பலி ஆரம்பப் பவனியில் பங்கேற்பதற்கான ஒழுங்குகள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் சிறார்கள் தமது முதல் நன்மை உடை அணிந்து கேவலார் திருத்தல மெழுகுதிரி ஆலயத்தின் பின்புறமாக 08.08.2026 அன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகிறோம்.
கேவலார் வெள்ளி மாலைப் பேரணிகள்
07.08.2026
திருவிழாவின் முதற்படியாக அன்றைய வழிபாடுகள் அமைவதால், அவற்றைச் சிறப்பாகவும் இறைபக்தி நிறைந்த முறையிலும் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இம்முறை மாலை 5.30 மணிக்கு Forum Pax Christi கண்ணாடி மண்டபத்தில் செபமாலை தொடங்கும். அதனைத் தொடர்ந்து நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பேரணியும் நடைபெறும்.
நற்கருணைப் பேரணியின்போது, பணித்தளங்களை அடையாளப்படுத்தும் 40 கொடிகளை ஏந்தியவர்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்பர். அவர்களின் நடுவில், நற்கருணைப் பேழை ஆலய வளாகத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டு பவனியாக எடுத்துச் செல்லப்படும். அதனைத் தொடர்ந்து இறைமக்கள் அனைவரும் பக்தியுடன் பேரணியில் இணைந்து செல்வார்கள்.
மெழுகுதிரிப் பவனி, வழிபாடு நடைபெறும் இடத்திலிருந்து ஆரம்பித்து, மரியன்னை காட்சி கொடுத்த திருத்தலம் வரை நடைபெறும். அங்கு இறுதிச் செபமும் ஆசீர்வாதமும் வழங்கப்பட்டு, அன்றைய வழிபாடுகள் நிறைவுபெறும்.
இவ்வழிபாடுகளிலும் பேரணிகளிலும் பக்தியுடனும் ஒழுங்குடனும் பங்கேற்று, திருவிழாவின் ஆன்மிகச் சிறப்பை உயர்த்துமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
கேவலார் திருவிழா வழிபாட்டு ஒழுங்குகள்
08.08.2026 சனிக்கிழமை
- இம்முறையும் இரண்டு திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. முதலாவது திருப்பலி: காலை 8:15 மணிக்கு செபமாலை ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
- இரண்டாவது திருவிழாத் திருப்பலி: காலை 10:15 மணிக்கு செபமாலை ஆரம்பமாகும். காலை 10:45 மணிக்கு மரியன்னைப் புகழ்ச்சிப் பாடல் இடம்பெறும். பவனி ஒப்புரவுச் சிற்றாலத்தில் (Beichtkapelle) ஆரம்பித்து, திருப்பலி நடைபெறும் கண்ணாடி மண்டபத்தை (Forum Pax Christi) அடையும். வரவேற்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலி ஆரம்பமாகும்.
- இரு வாசகங்களையும் மன்றாட்டுகளையும் வாசிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், காலை 10:00 மணிக்குள் திருவழிபாட்டுப் பொறுப்பாளரிடம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் காரணத்தால் நீங்கள் வர இயலாவிட்டால், தயவுசெய்து அதனை முன்கூட்டியே எமக்குத் தெரிவிக்கவும். இது பிரதியாளரை ஏற்பாடு செய்ய எமக்கு வசதியாக இருக்கும்.
தொடர்பாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்க்கான அறிவித்தல்
- தொடர்பாளர்கள், உதவித் தொடர்பாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கேவலார் திருப்பணிக்காக இரண்டு நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- தொடர்பாளர்கள், உதவித் தொடர்பாளர்கள், மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் திருப்பலி பவனியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தமிழர் பண்பாட்டு உடைமுறையைப் பின்பற்றி, பெண்கள் சேலையும் ஆண்கள் வேட்டியும் அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- மாலை வழிபாட்டிற்குப் பிறகு நடைபெறும் துப்புரவுப் பணிகளிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
YouTube நேரலை இணைப்புகள்
கேவலார் திருத்தலத் திருவிழா வழிபாடுகள் எமது பணியக வானொலியான Tamil Catholic Daily Radio மற்றும் Tamil Catholic Daily YouTube சேனல் ஆகியவற்றின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நேரலை ஒளிபரப்பிற்கான புதிய இணைப்புகள் இன்னும் சில நாட்களில் புதுப்பிக்கப்படும்.
- 07.08.2026 - மாலை வழிபாடு
- 08.08.2026 - காலை 09.00 மணி
- 08.08.2026 - 10.45 மணி திருவிழா
- 08.08.2026 - மாலை ஆசீரும்
நேரில் வர முடியாதவர்கள் இவ்விணைப்புகள் மூலம் ஒன்றிணைந்து செபிக்கலாம்.
கேவலாரில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுகின்றோம்
பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக எமது கலாச்சாரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் எம்மோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆயினும் கேவலார் அன்னையின் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ் அன்னதான நிகழ்வுகளில் செலவு செய்யும் பணத்தினை தாயகத்தில் வறுமையில் வாடும் எம் உறவுகளுக்கு பொது நிறுவனங்களுக்கூடாகவோ, குருக்களின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி உங்களுடைய நோக்கத்தினை நிறைவு செய்ய வேண்டுகின்றோம்.
மேலும், திருவிழா நாட்களில் உணவுப் பொதிகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களால் கேவலார் திருத்தல வளாகம் மாசடைகிறது. திருவிழா நிறைவடைந்த பின்னர் முழு வளாகத்தையும் சுத்தம் செய்வது மிகவும் சிரமமான பணியாக உள்ளது. எனவே, கேவலார் அன்னையின் திருத்தலத்தின் புனிதத்தையும் தூய்மையையும் பேணும் நோக்கில், திருவிழா காலத்தில் அன்னதான நிகழ்வுகளைத் தவிர்த்து, எமக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கின்றோம்
கேவலார் திருத்தலத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்

இவ்வாண்டும் எமது மாநிலம் வழங்கியுள்ள உத்தரவுகளின்படி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒழுங்கு விதிகளையும் கவனத்துடன் பணியகம் மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது. இப்புனிதப் பயணத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் பணியகத்தினாலும் நகர நிர்வாகத்தினாலும் விடுவிக்கப்படும் ஒழுங்கு விதிகளை அக்கறையுடன் பின்பற்றி, புனிதப் பயணம் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம் பெற ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
- புனிதத்தலத்திற்கு சொந்த வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் நீச்சல் தடாகத்திற்கு அண்மையாக இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ள வாகனத் தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- பிழையான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, இனிமேல் இப்படிப் பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசல்கள் மற்றும் வைத்திய உதவி வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
- குப்பைகளைப் போடுவதற்குரிய கொள்கலன்கள் பல இருந்தும், கழிவுகளை தாம் இருந்த இடங்களிலேயே விட்டுச் செல்வதை தவிர்த்து, அனைத்துக் குப்பைகளையும் அதற்குரிய கொள்கலன்களில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- வியாபாரக் கடைகள் மாலை 18.00 மணிக்கு கண்டிப்பாக விற்பனையை நிறுத்த வேண்டும். 17.30 மணிக்கு கடை வாசலுக்குள் நுழைவோர் தடுக்கப்பட வேண்டும் என கேவலார் நகர பாதுகாப்புப் பிரிவால் கேட்கப்பட்டுள்ளது.
- ஆலய வளாகங்களுக்குள் நுழைவோர் அமைதியைக் கடைப்பிடிக்கவும். செபித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள். பணியக உதவியாளர்கள் விடுவிக்கும் வேண்டுகோள்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
- திருப்பலி பதிவு செய்தல், உங்கள் முகவரி தொடர்பான மாற்றங்கள், "தொடுவானம்" இதழ் சந்தா, கேவலார் திருத்தலம் பற்றிய விளக்கங்கள், மற்றும் ஊடகம், பணியகம் தொடர்பான ஏனைய தேவைகள் ஆகிய அனைத்திற்கும், பணியகத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.