Banner Image

13-11-2026
பொதுக்காலம் 32 வாரம் வெள்ளிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9
போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே, தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன்.
பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர்.

இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள். கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 119: 1,2. 10,11. 17,18 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். 11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். பல்லவி

17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37
அக்காலத்தில், இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.''

அவர்கள் இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, இது எங்கே நிகழும்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
இறையாட்சி உங்கள் நடுவேயே !
மன மகிழ்ச்சியை வெளியே தேட முடியாது. அது அகத்தின் உள்ளேதான் இருக்கிறது. அதுபோல, இறையாட்சியும் மானிட வாழ்வுக்கு வெளியே இல்லை. நமது நடுவிலேயே இருக்கிறது என்னும் ஆண்டவரி;ன அமுத மொழிகள் இன்று நமக்கு வாழ்வு தரும் வார்த்தைகளாக வழங்கப்படுகின்றன. இன்று பலரும் தங்கள் தேடுதலை வெளியே வைத்திருக்கிறார்கள். சிலர் அற்புதங்களைத் தேடி நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் புதமைகளைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், தங்களுக்குள்ளேயே தேடினால், அமைதியும், நீதியும், மகிழ்ச்சியும் தங்களின் வாழ்விலும், பணியிலுமே அடங்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது என்கிறார் ஆண்டவர். இறையாட்சியி;;ன் அடையாளங்களைக் கண்டுகொள்ளலாம். எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் மன்னிப்பை அனுபவிக்கிறார்களோ, எங்கெல்லாம் பொருள்களைவிட மனிதர்கள் பெரிதாக மதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இறைவனின் விழுமிங்கள் போற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இறையாட்சி புலர்ந்துவிட்டது என்றுதானே பொருள். எனவே, இறையாட்சியை நாம் வெளியே தேடவும் வேண்டாம். இறையாட்சிக்குரிய பண்புகளைப் பிறரிடமும் எதிர்பார்க்க வேண்டாம். நமது வாழ்விலேயே இறையாட்சிப் பண்புகளை நாம் கடைப்பிடித்து, நம்மைக் காண்பவர்கள் இறையாட்சி இங்கேயே இருக்கிறது என்று கண்டுகொள்ளும் வண்ணம் வாழ்வோமாக.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உமது அரசு வருக என்று வேண்டுகிறோம். உமது அரசாட்சியி;ன் கூறுகளை எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க அருள்தாரும். உமது ஆசிகளை நாங்கள் வெளியே தேடாமல், எங்கள் வாழ்விலும், பணியிலுமே கண்டுகொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media