Banner Image

21-10-2026
பொதுக்காலம் 29 வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-12

கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன்.
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப் பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன்.

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – எசாயா 12: 2-3. 4. 5-6
மீட்பளிக்கும் ஊற்றிலிருந்து அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி



4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி



5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''

அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்'' (லூக்கா 12:35-36)
தமிழகத்தில் ஆண்கள் வேட்டி அணிவதுபோல அக்காலத்தில் யூதர்கள் நீண்ட அங்கி அணிவது வழக்கம். எனவே, ஏதாவது ஓடியாடி வேலை செய்ய நேர்ந்தால் ஆடையை மேலே தூக்கிக் கட்டிக்கொள்வார்கள். அப்போது காலசைவு எளிதாகும். இதையே இயேசு ''உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்'' என்கிறார் (லூக் 12:35). மேலும், யூத மக்களுக்கு இச்சொற்றொடர் முற்காலத்தில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வை நினைவுபடுத்தியது. அதாவது, எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட யூத மக்கள் கடவுளின் வல்லமையால் மோசேயின் தலைமையின்கீழ் விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கொண்டாடினார்கள். அது பாஸ்கா விழா (''கடந்து செல்லல் விழா'') என்றழைக்கப்பட்டது. அன்று பாஸ்கா ஆட்டினை நெருப்பில் வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரைகளோடும் உண்ண வேண்டும் என்னும் சட்டம் இருந்தது. அதை உண்ணும் முறை: ''இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள்'' (காண்க: விப 12:11). ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ''விரைந்து'' செயல்படுமாறு யூதர்கள் எச்சரிக்கப்பட்டனர். அதுபோலவே, இயேசுவும் தம் சீடர்களை நோக்கி, ''விழிப்பாயிருங்கள்'' என்றும் ''தயாராயிருங்கள்'' என்றும் கூறினார். மேலும் நீதிமொழிகள் நூலில் ''ஞானம்'' ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு, சுறுசுறுப்பாகச் செயல்படுவது குறிக்கப்படுகிறது: ''சுறுசுறுப்புடன் அவள் (''ஞானம்'') வேலை செய்வார்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்... அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது'' (காண்க: நீமொ 31:17-18). இயேசுவும் சீடர்களை நோக்கி, அவர்களுடைய ''விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்'' எனக் கூறுகிறார் (லூக் 12:35).



யூதர்கள் பாஸ்கா விழாவின்போது புளியாத அப்பத்தை உண்டனர். எனவே, புளிப்பு மா அப்போது தவிர்க்கப்பட்டது. இயேசுவும் தம் சீடர்களிடம் ''பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்'' என ஏற்கெனவே கூறியிருந்தார் (காண்க: லூக் 12:1). ஆக, சீடர்கள் ''விழிப்பாய் இருக்க வேண்டியது'' எது குறித்து என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். முதலில் சீடர்கள் பரிசேயரைப் போல வெளி அனுசாரங்களோடு நின்றுவிடக் கூடாது. இரண்டாவது, சீடர்கள் ''நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்'' என்பதை எப்போதும் கருத்தில் கொண்டு, மானிடமகன் வரும்போது அவரை வரவேற்க தயாராய் இருக்க வேண்டும். தொடக்க காலத் திருச்சபை இந்த ''விழிப்பு நிலை'' பற்றித் தெளிவாக உணர்ந்திருந்தது. எந்த நேரத்திலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழலாம் என அவர்கள் எதிர்பார்த்ததுண்டு. ஆயினும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக நிகழாது என்று அறிந்ததும் அவர்கள் தம்மைத் தேடி ஒவ்வொரு கணமும் வருகின்ற கடவுளைத் திறந்த உள்ளத்தோடும் தாராள இதயத்தோடும் ஏற்றிட ''விழிப்பாய்'' இருக்கக் கற்றுக் கொண்டார்கள். அதுபோலவே, கடவுளின் பதிலாளாக நம்மைத் தேடி வந்த இயேசுவைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த ''ஆண்டவராக'' ஏற்ற அவர்கள் தம் தலைவரை எப்போதும் தம் இதயம் என்னும் இல்லத்தில் ஏற்றிட ''விழிப்பாய்'' இருக்க அறிந்திருந்தனர். இன்று வாழ்கின்ற நாமும் கடவுளின் வருகையையும் இயேசுவின் உடனிருப்பையும் உணர்ந்தவர்களாக, ''விழித்திருந்து'' வாழ்பவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். அப்போது நம் இதயக் கதவைத் தட்டுகின்ற நம் இறைவனை நம் அன்போடு ஏற்று வரவேற்று உபசரிப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை விழித்திருந்து வரவேற்றிட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media