Banner Image

07-09-2026
பொதுக்காலம் 23 வாரம் திங்கட்கிழமை

புனித அன்னைதெரேசா
முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.

நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம். நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள்.

உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 5: 4-5. 5-6. 11
ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். பல்லவி



5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி



11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து நடுவே நில்லும்!'' என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, ``உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்டார்.

பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, ``உமது கையை நீட்டும்!'' என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்...அவர் உங்களுக்குச்
செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்'' (மத்தேயு 18:15)
எதற்கெடுத்தாலும் போருக்குப் புறப்படத் தயாராக இருந்தார் ஓர் அரசர். அவர் ஒருநாள் தம் மகனை அழைத்து, ''இந்த நாட்டை ஆளும் தகுதி உனக்கு உண்டா எனப் பார்க்க நான் விரும்புகிறேன். எனவே, நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா'' என்று ஆணையிட்டார். சில நாள்கள் கழிந்தபின் மகன் திரும்பி வந்தார். அவரோடு அரசருடைய எதிரிகள் மூவரும் கொண்டுவரப்பட்டனர். அம்மனிதர்களின் முகத்தில் பகைமை தெரியவில்லை; மாறாக, நட்புக் கலந்த புன்னகை தவழ்ந்தது. இதைப் பார்த்த அரசருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''இது என்ன விந்தை! நான் உன்னிடம் நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா என்றேனா அல்லது அவர்களைக் கொண்டு வா என்றேனா'' என்று உரத்த குரலில் கத்தினார். ''அப்பா, நீங்கள் கேட்டபடியே நான் நம் எதிரிகளாக இருந்த இவர்களுக்கும் நமக்கும் நடுவே இருந்த பகைமையைக் கொன்றுவிட்டேன்; இப்போது இவர்கள் நம் நண்பர்களாக மாறிவிட்டார்கள்; எனவே, நம் நண்பர்களாக மாறிவிட்ட இவர்களை நம் நாட்டுக்கு அழைத்துவந்தேன்'' என்றார். மகன் நாட்டை ஆளும் தகுதியை நிலைநாட்டிவிட்டார் எனத் தந்தை ஏற்றுக்கொண்டார்.



நமக்கு எதிராக நடப்போரை நாமும் எதிர்த்தால் அதனால் யாருக்கும் நன்மை விளையப் போவதில்லை. மாறாக, தவறுசெய்வோரை நாம் திருத்திவிட்டால் அதனால் அவருக்கும் நமக்கும் நன்மை விளையும். இது சமூக அளவில் மிகப் பொருந்தும். குற்றம் புரிந்தோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது பழிக்குப் பழி என அமைந்துவிடும் ஆபத்து உளது; ஆனால், குற்றம் புரிந்தோர் நல்வழிக்குத் திரும்பி வர வேண்டும் என்னும் நோக்கத்தோடு நாம் செயல்பட்டால் அது உண்மையான அன்பின் வெளிப்பாடாக அமையும். பிறரிடம் குற்றம் காண்பதற்கு முன்னர் நம்மிடம் குறைகள் உண்டா என எண்ணிப் பார்ப்பதும் நலம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பிறரை அன்பு செய்யும் நோக்கத்தோடு அவர்களை நல்வழிப்படுத்துவதில் ஈடுபட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media