Banner Image

05-09-2026
பொதுக்காலம் 22 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15
பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.
சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், ``எழுதியுள்ளதற்கு மேல் போகாதே'' என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன். நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம். உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்145: 17-18. 19-20. 21
மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி



19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். 20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். பல்லவி



21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5
ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்.

பரிசேயருள் சிலர், ``ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?'' என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்று கூறினார்.

மேலும் அவர்களிடம், ``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்...அவர் உங்களுக்குச்
செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்'' (மத்தேயு 18:15)
எதற்கெடுத்தாலும் போருக்குப் புறப்படத் தயாராக இருந்தார் ஓர் அரசர். அவர் ஒருநாள் தம் மகனை அழைத்து, ''இந்த நாட்டை ஆளும் தகுதி உனக்கு உண்டா எனப் பார்க்க நான் விரும்புகிறேன். எனவே, நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா'' என்று ஆணையிட்டார். சில நாள்கள் கழிந்தபின் மகன் திரும்பி வந்தார். அவரோடு அரசருடைய எதிரிகள் மூவரும் கொண்டுவரப்பட்டனர். அம்மனிதர்களின் முகத்தில் பகைமை தெரியவில்லை; மாறாக, நட்புக் கலந்த புன்னகை தவழ்ந்தது. இதைப் பார்த்த அரசருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''இது என்ன விந்தை! நான் உன்னிடம் நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா என்றேனா அல்லது அவர்களைக் கொண்டு வா என்றேனா'' என்று உரத்த குரலில் கத்தினார். ''அப்பா, நீங்கள் கேட்டபடியே நான் நம் எதிரிகளாக இருந்த இவர்களுக்கும் நமக்கும் நடுவே இருந்த பகைமையைக் கொன்றுவிட்டேன்; இப்போது இவர்கள் நம் நண்பர்களாக மாறிவிட்டார்கள்; எனவே, நம் நண்பர்களாக மாறிவிட்ட இவர்களை நம் நாட்டுக்கு அழைத்துவந்தேன்'' என்றார். மகன் நாட்டை ஆளும் தகுதியை நிலைநாட்டிவிட்டார் எனத் தந்தை ஏற்றுக்கொண்டார்.



நமக்கு எதிராக நடப்போரை நாமும் எதிர்த்தால் அதனால் யாருக்கும் நன்மை விளையப் போவதில்லை. மாறாக, தவறுசெய்வோரை நாம் திருத்திவிட்டால் அதனால் அவருக்கும் நமக்கும் நன்மை விளையும். இது சமூக அளவில் மிகப் பொருந்தும். குற்றம் புரிந்தோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது பழிக்குப் பழி என அமைந்துவிடும் ஆபத்து உளது; ஆனால், குற்றம் புரிந்தோர் நல்வழிக்குத் திரும்பி வர வேண்டும் என்னும் நோக்கத்தோடு நாம் செயல்பட்டால் அது உண்மையான அன்பின் வெளிப்பாடாக அமையும். பிறரிடம் குற்றம் காண்பதற்கு முன்னர் நம்மிடம் குறைகள் உண்டா என எண்ணிப் பார்ப்பதும் நலம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பிறரை அன்பு செய்யும் நோக்கத்தோடு அவர்களை நல்வழிப்படுத்துவதில் ஈடுபட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media