Banner Image

17-08-2026
பொதுக்காலம் 20 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24
எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!'' நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.

அப்போது மக்கள் என்னிடம், `நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?' என்று கேட்டனர். எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: `ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர். நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – இணைச்சட்டம் 32: 18-19. 20. 21
பல்லவி: நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
18உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய். 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22
அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

இயேசு அவரிடம், ``நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்'' என்றார்.

அவர், ``எவற்றை?'' என்று கேட்டார். இயேசு, ``கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' என்று கூறினார்.

அந்த இளைஞர் அவரிடம், ``இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?'' என்று கேட்டார்.

அதற்கு இயேசு, ``நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
நம்பிக்கையின் வெற்றி !
ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். தாய்மையின் மேன்மையை வெளிக்கொணரத்தான் ஒருவேளை இயேசு நாடகமாடினாரோ என்னவோ. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார்.



பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.

மன்றாட்டு:

அன்பின் இயேசுவே, கனானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டிய உம்மைப் போற்றுகிறோம். மனந் தளராமல், நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும் என்பதற்கு மாதிரியாகத் தந்த அந்தத் தாய்க்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடாமல் உம்மையே பற்றிக்கொள்ள வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media