Banner Image

15-08-2026
பொதுக்காலம் 19 வாரம் சனிக்கிழமை

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
முதல் வாசகம் – திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டி லிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab
பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 45: 9. 10-11. 15
பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
9அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! - பல்லவி

10கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! - பல்லவி

15மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26
கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்
சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ``ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மரியா... 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்...
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்' என்றார்'' (லூக்கா 1:49,52)
மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை. இந்த உண்மையை ஒரு பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்ற ஆகஸ்டு 15 நம் இந்திய நாட்டின் விடுதலை நாள் கூட. மரியாவின் மண்ணக வாழ்வின் இறுதியில் கடவுள் அவரை மகிமைப்படுத்தினார். மரியா விண்ணேற்பு அடைந்தார் என்னும் வெளிப்படையான கூற்று விவிலியத்தில் இல்லையெனினும், மரியா பற்றி விவிலியம் கூறுகின்றவற்றையும் வரலாற்றில் திருச்சபை மரியாவைப் புரிந்துகொண்ட முறையையும் கருதும்போது நாம் மரியாவுக்குக் கடவுள் அளித்த தனிச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. மரியா தம் வயிற்றில் கடவுளின் மகனாகிய இயேசுவைக் கருத்தாங்கி அவரை உலகின் மீட்பராக நமக்கு அளித்தார். எனவே நாம் மரியாவைக் ''கடவுளின் தாய்'' எனப் போற்றுகிறோம். மரியாவுக்குக் கடவுள் இப்பெரும் சிறப்பை அளித்தது கடவுளின் அருள் பெருக்கின் விளைவே. மரியாவுக்குக் கடவுள் ''அரும்பெரும் செயல்கள்'' செய்தார். கடவுளின் திருவுளத்தை முழுமையாக ஏற்று அதன்படி நடந்த மரியாவைக் கடவுள் உயர்த்தினார்.




மேலும் மரியா திருச்சபைக்கும் அன்னையாக இருக்கின்றார். அதாவது கடவுளின் வார்த்தையை அவர் தம் இதயத்தில் தாங்கி அதையே தம் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டார். மரியா கடவுளின் வார்த்தையைத் தம் உதரத்தில் கருவாக ஏற்று அவரை உலகுக்கு அளித்தார். இப்பெரும் சிறப்பில் பங்குபெற்ற மரியா நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். கடவுளை நம்பி, அவருடைய வழியில் நடப்போருக்கு எத்தகு உயர்நிலை காத்திருக்கிறது என மரியா நமக்குத் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருக்கிறார். மரியா தம் உறவினராகிய எலிசபெத்தைச் சந்தித்தபோது பாடிய மகிழ்ச்சிக் கீதத்தில் கடவுள் ''தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனக் கூறியது நமக்கும் பொருந்தும். கடவுளின் முன்னிலையில் நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்தால் கடவுள் தம் அரசில் நம்மை ஏற்று நமக்கு மாட்சி அளிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மைத் தாழ்ச்சியோடு அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media