Banner Image

08-08-2026
பொதுக்காலம் 18 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 12- 2: 4
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே, தொன்றுதொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் காண்பதில்லை; ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே; புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே. தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?

நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வன போலும் நடத்துகின்றீர். கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் தூண்டிலால் பிடிக்கின்றார்கள்; வலையால் வாரி இழுக்கின்றார்கள்; தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள். ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்; பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்; ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்; அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி, மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ?

நான் காவல் மாடத்தில் நிற்பேன்; கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்; என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 9: 7c-8. 9-10. 11-12 (பல்லவி: 10b)
பல்லவி: உம்மை நாடி வருவோரை ஆண்டவரே, நீர் கைவிடமாட்டீர்.
7cஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.8உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். - பல்லவி

9ஒடுக்கப்படுவோர்க்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.10உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. - பல்லவி

11சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;12ஏனெனில், இரத்தப் பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20
அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார். அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞசி அவர் மூழ்கும்போது,
'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினானார்'' (மத்தேயு 14:29-30)
இயேசு இயற்கை சக்திகளையும் அடக்குகின்ற வல்லமை கொண்டவர் என்பதை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (மத் 8:23-27). திடீரெனக் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் படகைக் கவிழ்க்கவிருந்த வேளையில் இயேசு காற்றையும் கடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். பின்னர் ஒரு சில அப்பங்களையும் மீனையும் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்தார் (மத் 14:13-21). இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இயேசு கடல்மீது நடந்து சென்ற அதிசயத்தை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 14:22-33). மாற்குவில் வரும் பாடத்திற்கும் மத்தேயுவின் பாடத்திற்கும் இடையே உள்ள ஒரு பெரிய வேறுபாடு பேதுரு கடலில் நடக்கும் நிகழ்ச்சியாகும். மத்தேயு பொதுவாக இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குறைந்தவர்கள்'' எனக் குறிப்பிடுவார். இங்கேயும் பேதுரு நம்பிக்கை குறைந்தவராக நடப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் பேதுரு துணிச்சல் மிக்கவர் கூட. கடலில் நடந்துசெல்ல இயேசு அனுமதி தர வேண்டும் எனக் கேட்கின்ற மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தம்மை முழுவதுமாக இயேசுவிடம் கையளிக்கவில்லை. அதாவது, அவர் இயேசிடம் கொண்ட நம்பிக்கை ''குறைவுள்ளதாக'' இருந்தது. இந்த நம்பிக்கைக் குறைவின் காரணமாகப் பேதுரு கடலில் மூழ்கப் போனார். அவ்வாறு மூழ்கிக் கொண்டிருக்கும்போதே அவருடைய இதய ஆழத்திலிருந்து எழுகிறது ஒரு மன்றாட்டு: ''ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்பதே அம்மன்றாட்டு (மத் 14:30). இங்கே நாம் கருதத்தக்க கூறுகள் பல உண்டு. முதலில் பேதுருவின் கதை அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு தனியார் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. பேதுரு இயேசுவின் சீடர்களின் பிரதிநிதியாக இவண் வருகின்றார். அவருடைய நம்பிக்கைக் குறைவு இயேசுவின் சீடர்களாகிய நம்மில் சில வேளைகளில் எழுகின்ற நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது. நாமும் இயேசுவிடத்தில் முழு நம்பிக்கை கொள்ளாத வேளைகளில் ஆபத்து நம்மை மூழ்கடிக்க முயல்வதுண்டு; துன்பங்கள் எழுந்து நம்மை அமிழ்த்திவிட முனைவதுண்டு. அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் கடவுளை நோக்கி உதவி நாடி நம் மன்றாட்டை எழுப்பிட வேண்டும். பேதுரு இயேசுவை ''ஆண்டவர்'' என அழைத்தது இயேசுவிடத்தில் அவர் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதைக் கண்டார் என்பதைக் காட்டுகிறது.




தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு ''உடனே தம் கையை நீட்டிப் பிடிக்கிறார்'' (காண்க: மத் 14:31). நோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கிய இயேசுவின் செயல் இது. இங்கே இயேசு பேதுருவின் நம்பிக்கையின்மையை ஒருவிதத்தில் ''குணப்படுத்துகிறார்''. ஆனால் நலம் கொணர்கின்ற இயேசு நமக்கு மீட்பு அளிக்கிறார் என்பதே இங்கே நாம் காண்கின்ற ஆழ்ந்த உண்மை. நம் உள்ளத்தில் ஐயம் எழுகின்ற வேளைகளில் நாம் நம்பிக்கையோடு கடவுளையும் அவர் நம்மை மீட்க அனுப்பிய இயேசுவையும் அணுகிச் சென்றால் தூய ஆவியின் அருளால் நமது நம்பிக்கை மீண்டும் உறுதியாகும். நாமும் நலம் பெற்று மீட்பில் பங்கேற்போம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்கள் எழுந்து எங்களை அழுத்துகின்ற வேளைகளில் எங்களைக் கைதூக்கி விடுபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media