Banner Image

26-07-2026
பொதுக்காலம் 17 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
விண்ணரசுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனின் அரசில் ஒன்றிணைய அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. விண்ணரசு ஒரு புதையலுக்கும், விலைமதிப்பற்ற ஒரு முத்துக்கும் ஒப்பானது என இயேசு குறிப்பிடுகிறார். தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, புதையல் உள்ள நிலத்தையும், ஒப்பற்ற முத்தையும் அடைய முயற்சிப்பது போன்று, விண்ணரசை அடைய இவ்வுலகின் நாட்டங்களை கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். விண்ணரசு என்ற வலையில் சிக்கும் நல்ல மீன்களாக வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
அந்நாள்களில் கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!' என்று கடவுள் கேட்டார். என் கடவுளாகியஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை.
இதோ! உமக்கென நீர் தெரிந்துகொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?' என்று கேட்டார்.

சாலமேன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், 'நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 119: 57,72. 76-77. 127-128. 129-130
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
57 ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

127 பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். 128 உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். -பல்லவி

129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்.
சகோதரர் சகோதரிகளே, கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52
அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
ஞானத்தின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் உமது ஞானத்தை அளித்து, உலக மக்கள் அனைவரையும் விண்ணரசின் உறுப்பினர்களாக மாற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
விண்ணக அரசரே இறைவா,

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாய் செயல்படவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஞானத்துடன் முடிவெடுக்கவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
ஒப்பற்ற புதையலே இறைவா,

ஆன்மீக இருளில் சிக்கியிருக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது உண்மையின் அரசில் ஒன்றிணைவதற்காக, பொய்மை நெறிகள் அனைத்தையும் கைவிட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
தேர்வு செய்பவரே இறைவா,

பிறவிப் பெருங்கடலில் நீந்தும் மீன்களான கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், தீயவை அனைத்திலிருந்தும் விலகி, நன்மைத்தனத்தால் விண்ணரசுக்கு தகுதிபெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
இணையில்லா முத்தே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை அடைவதற்காக இவ்வுலகத் தீய நாட்டங்களைத் துறக்கும் துணிவைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)
கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.




நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media