Banner Image

23-07-2026
பொதுக்காலம் 16 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3,7-8,12-13
பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.

செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், `ஆண்டவர் எங்கே?' என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர். வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.

ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்36: 5-6ab. 7-8. 9-10
பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.
5ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை. 6abஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. - பல்லவிலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. பல்லவி

7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். 8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். பல்லவி

9 ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம். 10 உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 25
காண்க அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில் சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
"சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன" (மத்தேயு 13:8)
விதைப்பவர் உவமை என்னும் கதைக்கு விளக்கம் இயேசுவே அளித்தார் என மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். அந்த விளக்கத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் "இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வோருக்கு" ஒப்பாகும் (காண்க; மத் 13:23). இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதைக் கேட்டால் மட்டும் போதாது. நமது உள்ளம் பண்படுத்தப்பட்ட நிலத்தைப்போலப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்த நன்னிலத்தில் விழுகின்ற இறைவார்த்தை என்னும் விதை நன்றாக வேரூயஅp;ன்றி, தளிர்த்து, கதிர்விட்டுப் பன்மடங்காகப் பலன் தரும்.



இறைவார்த்தை என்னும் விதை நம்மில் வேரூயஅp;ன்றி வளர்ந்தால் என்ன பலன் தோன்றும்? இறைவார்த்தை மனிதராக உருவெடுத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. அந்த இறைவார்த்தை கடவுளோடு இருந்தார் எனவும் கடவுளாகவும் இருந்தார் எனவும் யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது (யோவான் 1:1-14). எனவே, நம்மில் இறைவார்த்தை பலன் தரவேண்டும் என்றால் நாம் இறைவார்த்தையின் உச்ச வெளிப்பாடான இயேசுவைப் போல வாழ வேண்டும். அவருடைய மதிப்பீடுகள் நம் மதிப்பீடுகளாக வேண்டும். அவர்தம் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும். அப்போது நம் இதயத்தில் தூவப்பட்ட கடவுளின் வார்த்தை என்னும் விதை நற்பயன் நல்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தை எங்கள் உள்ளத்தில் பதிந்து, வேர்விட்டு எங்கள் வாழ்வில் நற்கனிகளைத் தாராளமாக ஈந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media