Banner Image

20-07-2026
பொதுக்காலம் 16 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார். என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பி வைத்தேன். ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா? ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 50: 5-6. 8-9. 16-17. 21,23
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக்
5`பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.'
6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! -பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின்
ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16 `என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42
அக்காலத்தில் மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ``போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்'' என்றனர். அதற்கு அவர் கூறியது: ``இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, 'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்' என்றனர்'' (மத்தேயு 12:38)
இயேசு மக்களுக்குப் போதித்ததோடு நிறுத்தவில்லை. அவர் வல்லமை மிக்க அரும் செயல்களையும் செய்தார். அச்செயல்கள் எல்லாம் மந்திர மாயஜாலமாக அமைந்த போலிக் காட்சிகள் அல்ல; மாறாக, நோயுற்றோருக்கு நலம் கொணரவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும் இயேசு அரும் செயல்கள் புரிந்தார். அச்செயல்கள் அதிசயமான ''அடையாளங்கள்''. அவற்றைப் பார்த்தவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் துலங்கிய அதிசய சக்தியை அடையாளம் கண்டார்கள். அவர் வழியாகக் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதை அறிந்துகொண்டார்கள். ஆனால் யூத சமயத் தலைவர்கள் இயேசு புரிந்த அரும் செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். எனவேதான் அவர்கள் இயேசுவைப் பார்த்து, ''போதகரே, எங்களுக்கு ஓர் அடையாளம் காட்ட வேண்டும்'' எனக் கேட்கின்றனர் (காண்க: மத் 12:38). இக்கோரிக்கை நல்ல மனத்தோடு கேட்கப்படவில்லை; மாறாக, இயேசுவின் எதிரிகள் அவரிடத்தில் குற்றம் காணும் பொருட்டே இவ்வாறு கேட்டனர். இயேசு ஏற்கெனவே புரிந்த அதிசயங்களைக் கண்டுகொள்ளத் தவறியவர்கள் இனிமேல் அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டும் நம்பிவிடுவார்களா?



இறுதியாக இயேசு ஓர் ''அடையாளம்'' கொடுப்பார். அதுவே அவர் இறந்து மீண்டும் உயிர்பெற்றெழுகின்ற புதுமை. இதையும்கூட நம்ப மறுத்தவர்கள் இருந்தனர். இந்த அதிசய நிகழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில் ''யோனாவின் அடையாளத்தை'' அவர்களுக்குக் கொடுக்கிறார் இயேசு. யோனா இறைவாக்கினர் மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவும் இருந்த பின்னர் மீண்டும் உயிரோடு வெளிவந்ததுபோல, இயேசுவும் சாவிலிருந்து விடுதலை பெற்றவராக, புத்துயிர் பெற்று எழுவார் (மத் 12:40). பிற இனத்தைச் சார்ந்தவர்கள் கடவுளின் திட்டத்தில் சிறப்பிடம் பெறுவார்கள் எனவும் இயேசு அறிவிக்கிறார். யோனா அறிவித்த செய்தியைக் கேட்ட நினிவே மக்கள் மனம் மாறினர்; இஸ்ரயேலரைச் சாராத ''தென்னாட்டு அரசி'' சாலமோனின் அறிவுத் திறனைப் பாராட்டினார். இயேசு கடவுளிடமிருந்து வந்து இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்த மாபெரும் ''இறைவாக்கினர்''. அவருடைய போதனையில் கடவுளின் ''ஞானம்'' துலங்கியது. இவ்வாறு அவர் யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் மேலானவர். இந்த உண்மையை யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்று இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்ற நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக, நம் அகக் கண்களை அகலத் திறந்து பார்த்தால் மட்டுமே இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்குவதைக் கண்டுகொள்ள முடியும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media