Banner Image

14-06-2026
பொதுக்காலம் 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
அன்பானவர்களே, பொதுக்காலத்தின் பதினொறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போட வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையாட்சியைப் பறைசாற்ற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறாோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர இயேசு அழைப்பு விடுக்கிறார். நாம் ஆண்டவருக்காக பணியாற்றும் அமைதியின் தூதர்களாக இந்த உலகில் செயல்பட இறைவன் அழைக்கிறார். நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பைத உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19:2-6a
எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.
அந்நாள்களில்

இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலைநிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார்.

அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்ல வேண்டியது - இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது - இதுவே: “நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.”

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 100: 1-2, 3, 5
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:6-11
கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
சகோதரர் சகோதரிகளே,
நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 1:15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:36- 10: 8
அக்காலத்தில்
திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்கiளைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
வாழ்வளிக்கும் இறைவா!

எமது திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைபணியை குறைவின்றி நிறைவேற்ற வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
நிறைவாழ்வான இறைவா!

எங்கள் வாழ்க்கைப் பாதையில் நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இல்லாமல், எங்கள் வாழ்விலும் தாழ்விலும் உம்மையே உறுதியாகப் பற்றிக் கொண்டு நடக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
மீட்பளிக்கும் இறைவா!

பாவ வழிகளில் சிக்குண்டு அதனின்று வெளிவர வழி தெரியாமல் தவிக்கின்ற அனைவருக்காகவும் வேண்டுகிறோம். அவர்கள் தங்கள் தவறுகளிலேயே அமிழ்ந்து, அழிந்து போய்விடாமல் நீரே அவர்களை தடுத்தாட்கொண்டு பாதுகாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,

உலெகங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''நிலத்தில் ஒருவர் விதைக்கிறார்...
அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது'' மாற்கு (4:27)
விவசாயப் பின்னணியிலிருந்து இன்னொரு உவமையை எடுத்துக் கூறுகிறார் இயேசு. வயலில் விதைக்கச் செல்லுமுன் மண் நன்றாகப் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதைத்த பிறகு அவ்விதை நிலத்தில் வேரூயஅp;ன்றுகிறது; தளிர் தோன்றுகிறது; இலை வளர்கிறது; பூ மலர்கிறது; கதிர் வெளியாகித் தானியம் உருவாகிறது. இச்செயல்களில் எதையுமே விவசாயி செய்வதில்லை; மாறாக, இயற்கையே செய்கிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இயற்கையின் செயல்கள் நிகழ்ந்து, மனிதருக்கு வளமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இயேசு மக்களுக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். அதாவது, கடவுளாட்சியை இவ்வுலகுக்குக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுபவர் கடவுள்தாம். மனிதர் தம் சொந்த முயற்சியால், கடவுளின் துணையின்றி, கடவுளாட்சியை மலரச் செய்ய இயலாது.

இதனால், கடவுளாட்சியை மலரச் செய்வதில் மனிதருக்குப் பங்கே இல்லை என்று நாம் தவறாக முடிவுகட்டிவிடல் ஆகாது. கடவுளோடு இணைந்து மனிதர் உழைக்கும் போது கடவுள் ஆட்சி அங்கே மலர்கின்றது. அப்போது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை மனிதருக்கு இயல்பான ஒன்றாக மாறும். அதுவே இறையாட்சியின் மலர்ச்சி. அத்தகைய ஆட்சியைக் கொணர்வதுதான் தம் பணி என்று இயேசு முழங்கினார். அவரோடு இணைந்து மனிதர் செயல்படும்போது அவருடைய இறையாட்சிப் பணி விரிவடையும்; மனித சமுதாயம் கடவுள் விரும்பும் சமுதாயமாக, கடவுளின் ஆட்சி நிலவும் குழுவாக மாறும். இத்தகைய புதிய சமுதாயம் இங்கே தொடங்கிவிட்டது என்றாலும் அதன் நிறைவு இறுதிக்காலத்தைச் சார்ந்தது என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, இறையாட்சி மலர நாங்கள் உம்மோடு ஒத்துழைக்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media