Banner Image

11-06-2026
பொதுக்காலம் பத்தாவது வாரம் வியாழக்கிழமை

புனித பர்னபா - திருத்தூதர்
முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11;21-26 13;1-3
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
அந்நாள்களில்
பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர் மீது வைத்துத் திருப்பணியில் அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 98: 1. 2-3. 4. 5-6
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் நீதியை வெளிப்படுத்தினார்.
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி

4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 28: 19a, 20b
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-13
அந்நாட்களில் யேசு சீடர்களை நோக்கி விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றுங்கள்.8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
பணியின் பெருமை
எந்த வல்லரசும் தன் பணியாளர்களுக்கு இவ்வளவு சலுகைகள், பாதுகாப்புக்கள் வழங்கியதாக வரலாறு இல்லை, இனிமேலும் இருக்காது. குணமாக்கும் வல்லமை, இறந்தோரை உயிர்தெழச் செய்யும் ஆற்றல், பேய் ஓட்டும் வரம். மனிதனை மனிதனோடும் சமூகத்தோடும் ஆண்டனோடும் உறவாக்கும் ஒப்பற்ற கொடை. பணத்தை நம்பியோ, பொன் பொருளை நம்பியோ செல்லவேண்டாம். என்னை நம்பிச் செல்லுங்கள். உணவு, உடை, இடம் தேடி அலைய வேண்டாம். நாம் ஏற்பாடு செய்வோம். எந்த அரசு தன் பணியாளர்களுக்கு இப்படிப் பராமரிப்புக் கொடுக்கும்? செல்லும் இடமெங்கும், நாட்டிலும் வீட்டிலும் அமைதியை வாழ்த்தாக, வாழ்வாக வழங்குங்கள். உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உபசரிக்காமலும், உங்களுக்குச் செவிகொடுக்காமலும், உங்களை எதிர்ப்பவர்களை நாம் கடைசி நாளில் கடுந்தண்டனைக்கு உள்ளாக்குவோம். ஆஹா! என்னே பாதுகாப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் அரசில் ஒரு பணியாளனாய் அல்லது பணியாளர்களைப் பராமரிப்பவனாய் வாழ எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media