Banner Image

15-05-2026
பாஸ்க்கா காலம் ஆறாவது வாரம் வெள்ளிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18
இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.
பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார். கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 47: 1-2. 3-4. 5-6
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 24:46

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்றார்'' (யோவான் 14:27)
இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களிக்கிறார். வழக்கமாகக் கூறப்படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக்கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவுளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக் கடவுளோடு ஒன்றிணைக்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமைதியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத்திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, இயேசு வாக்களிக்கின்ற அமைதி நம்மைக் கடவுளோடு உறவாக்குகின்ற அதே வேளையில் நம்மை அடுத்திருப்போரோடும் நாம் நல்லுறவில் வாழ்ந்திட நமக்கு வழியாகிறது.

இயேசு கொணர்கின்ற அமைதி சொல்லளவில் நின்றுவிடாது. மாறாக, கடவுளின் வல்லமையால் அமைதி செயலாக்கப்படும். இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, ''அமைதியாயிரு!'' என்றதும் ''மிகுந்த அமைதி'' உண்டாயிற்று (காண்க: மாற் 4:39). ஆனால் கடவுள் அமைதி கொணர்வது இயற்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு நின்றுவிடுவதில்லை. அது மனித உள்ளங்களைப் பண்படுத்தி எல்லா மனிதரும் அன்பும் நீதியும் நிறைந்த உலகை உருவாக்கிட அவர்களுக்கு ஊக்கம் தருகின்ற சக்தியாகவும் செயல்படுகிறது. எனவே, அமைதி என்பது போர் நிகழா நிலை மட்டுமல்ல, மாறாக, கடவுள் உலகுக்கென்று வகுத்த திட்டத்தை மனிதர் நன்மனத்தோடு இணைந்து செயல்படுத்துவதன் பயனாகவே அமைதி தோன்றும். இத்தகைய அமைதி கடவுளின் கொடையாக நமக்கு அளிக்கப்படும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் இக்கொடையை நாம் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிலையாக நம்மிடையே நிலவிட நாம் உழைக்கவும் வேண்டும். ஆக, கடவுள் வாக்களிக்கின்ற அமைதி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் உலகிலும் நிலவித் தழைத்திட வேண்டும் என்றால் கடவுளின் அருளோடு நாமும் ஒத்துழைப்பது தேவை.

மன்றாட்டு:

இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் இவ்வுலகிற்கும் அளித்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media